தேசிய செய்திகள்

சீருடையில் இருந்த 4 பேர் கற்பழித்தனர் என குற்றச்சாட்டு கூறிய ஒடிசா சிறுமி தற்கொலை

ஒடிசாவில் சீருடை அணிந்த நான்கு பேர் கற்பழித்தனர் என 3 மாதங்களுக்கு முன் குற்றச்சாட்டு தெரிவித்த 14 வயது சிறுமி இன்று தற்கொலை செய்து கொண்டார். #Odisha

புவனேஸ்வர்,

ஒடிசாவில் கோரபுத் மாவட்டத்தில் மூசாகுடா கிராமத்தில் வசித்து வந்த 11ம் வகுப்பு மாணவி, வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த தன்னை சீருடையில் இருந்த 4 பேர் கற்பழித்தனர் என கடந்த வருடம் அக்டோபர் 10ந்தேதி குற்றச்சாட்டு கூறினார். ஆனால் மாநில போலீசார் வெளியிட்ட அறிக்கையில், அந்த சிறுமி கற்பழிக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

ஒடிசா காவல் துறையின் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பும் இதே தகவலை ஒடிசா மனித உரிமைகள் ஆணையத்திற்கு தெரிவித்தது. ஆனால் அந்த சிறுமி தொடர்ந்து தனது குற்றச்சாட்டில் உறுதியை வெளிப்படுத்தினாள்.

இந்த நிலையில், சிறுமியின் குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லாத நிலையில் சிறுமி தூக்கு போட்டு கொண்டுள்ளார். அதன்பின் சிறுமியை மீட்டு உள்ளூர் சுகாதார மையத்திற்கு சுயநினைவற்ற நிலையில் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

நீதி கிடைக்காத ஏமாற்றத்தில் தீவிர முடிவை எடுத்து விட்டார் என சிறுமியின் உறவினர் கூறியுள்ளார். இதற்கு முன்பும் அதிகளவு இரும்பு சத்து மாத்திரைகளை எடுத்து கொண்டு சிறுமி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

முதல் மந்திரி நவீன் பட்நாயக் சிறுமி உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிறுமி கற்பழிப்பு புகார் அளித்த இரு வாரங்களில், ஒடிசா டி.ஜி.பி. உள்ளிட்ட மூத்த காவல் துறை அதிகாரிகள் வழக்கை வாபஸ் பெற வற்புறுத்தினர் என தனது குற்றச்சாட்டை சிறுமி கூறினார். போலீஸ் உயரதிகாரி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

சிறுமியின் கற்பழிப்பு பற்றி முதல் மந்திரி உத்தரவிட்ட நீதி விசாரணை இன்னும் முடிவடையாமல் உள்ளது.

#Odisha #rape