தேசிய செய்திகள்

ஒரு நாள் காவலில் கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை தொடங்கியது

கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் காவலில் எடுத்துள்ள சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை தொடங்கி உள்ளனர். #KartiChidambaram

தினத்தந்தி

புதுடெல்லி

ப.சிதம்பரம் 2007-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடுக்கான அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கிடைத்த முதலீட்டு தொகையை, குறைத்து காட்டுவதற்கு உதவி செய்ததாகவும், அதற்கு ஆதாயமாக ரூ.10 லட்சத்தை, தான் மறைமுகமாக நடத்தி வரும் அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் நிறுவனம் மூலம் வெளிநாட்டில் இருந்து பெற்றதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது கடந்த ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

அதில் ரூ.4.62 கோடி மட்டுமே முதலீடு திரட்ட அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு அதிகமாக திரட்டப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் கடந்த ஜனவரி மாதம் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. அப்போது அவருடைய அலுவலகத்தில் இருந்து பணபரிமாற்ற முறைகேட்டை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குனர்கள் பீட்டர் முகர்ஜி, அவருடைய மனைவி இந்திராணி முகர்ஜி ஆகியோரும் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் இந்திராணி முகர்ஜியின் மகள் ஷீனா போராவை கொன்ற வழக்கில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது மத்திய அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் கடந்த மாதம் 15-ந்தேதி அமலாக்கத்துறை முன்பாக ஆஜர் ஆகி விளக்கமும் அளித்தார்.

இந்த நிலையில் மறுநாளே அவருடைய ஆடிட்டர் பாஸ்கரராமனை டெல்லியில் அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க கார்த்தி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார். அந்த மனு வருகிற 6-ந்தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.

இதற்கிடையே 2 வழக்குகள் தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து சி.பி.ஐ. சுற்றறிக்கைகளை வெளியிட்டது. இதை தள்ளுபடி செய்யக் கோரியும், வர்த்தக நிமித்தமாக தான் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் அவர் மனுதாக்கல் செய்தார். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையில் சென்னை ஐகோர்ட்டே விசாரித்து இதுபற்றி முடிவெடுக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து அவருடைய மனுவை கடந்த 16-ந்தேதி விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லத் தடை இல்லை என்றும் அதேநேரம், தனது பயணம் குறித்த முழு விவரங்களையும் சி.பி.ஐ.யிடம் அவர் தெரிவிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும் பிப்ரவரி மாதம் 28-ந்தேதிக்குள் கார்த்தி சிதம்பரம் நாடு திரும்பி விடவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

இதைத்தொடர்ந்து 10 நாட்களுக்கு முன்பு கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றார். தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று காலை அவர் லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அதிகாலை 5.40 மணிக்கு வரவேண்டிய விமானம் தாமதமாக காலை 8 மணிக்கு லண்டனில் இருந்து வந்தது. அப்போது விமான நிலைய குடியுரிமை பகுதியில் டெல்லி சி.பி.ஐ. சூப்பிரண்டு தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் காத்திருந்தனர்.

குடியுரிமை சோதனை முடிந்ததும் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்று அங்குள்ள ஒரு அறையில் சுமார் 45 நிமிடங்கள் விசாரித்தனர். காலை 8.50 மணி அளவில் கார்த்தி சிதம்பரத்தை அவர்கள் கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக டெல்லி அழைத்து செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தின் உடமைகள் அவரது உதவியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பன்னாட்டு முனையத்தில் காலை 9.15 மணிக்கு கார்த்தி சிதம்பரத்துடன் சி.பி.ஐ. அதிகாரிகள் வெளியே செல்ல முடிவு எடுத்தனர்.

ஆனால் பன்னாட்டு முனையத்தில் இருந்து நேராக உள்நாட்டு முனையத்திற்கு வந்தனர். அங்கிருந்து காலை 10.30 மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.

அதிகாலை முதலே சி.பி.ஐ. அதிகாரிகள் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்திருந்த தகவல் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. லண்டன் விமானம் தரையிறங்கியதும் சி.பி.ஐ. அதிகாரிகள் குடியுரிமை பகுதிக்கு சென்றுவிட்டனர். அங்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் பற்றி யாருக்கும் தகவல்கள் பரவாமலிருக்க வேறு பணிக்காக வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

விமானத்தில் கார்த்தி சிதம்பரம் வந்ததும் அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து சென்றனர். சுமார் 45 நிமிடங்களுக்கு பின்னர் தான் அவரை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் வந்திருப்பது விமான நிலையத்தில் உள்ள உளவுத்துறை உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் டெல்லி பாட்டியாலா அவுஸ் கோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சுமித் அனந்த் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ஒரு நாள் மட்டும் அவரை காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி அனுமதி வழங்கினார்.

இன்று சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணையை தொடங்கினர். இன்று மாலை விசாரணையை முடித்து நாளை மதியம் 12.30 மணிக்கு மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தபடுவார் என தெரிகிறது.

இந்த நிலையில் தன்னிடம் விசாரணை நடத்திய அதிகாரிகளிடம் மிரட்டு பாணியில் நடந்து கொண்டதாகவும், தான் மந்திரியானதும் அவர்களை கவனித்து கொள்வதாகவும் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்