ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் கிலூரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த கடுமையான துப்பாக்கி சண்டையில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் கூடுதலாக 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
இதனை ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார் உறுதிப்படுத்தினர். மொத்தம் 4 பேர் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் அவர்களை அடையாளம் காணும் பணி நடந்தது. இதுபற்றி காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. விஜய குமார் கூறும்பொழுது, கிலூரா பகுதியில் பழத்தோட்டம் ஒன்றில் 4 முதல் 5 பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என சோபியான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை தங்களது வளையத்துக்குள் கொண்டு வந்தனர். பின்னர் தேடுதல் பணியை தொடங்கினர். பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட தொடங்கினர்.
இந்த கடும் சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். ஒருவர் உயிருடன் பிடிபட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சண்டையில் போலீசார் யாருக்கும் காயமேற்படவில்லை. வருகிற நவம்பரில் எங்களது அதிரடி நடவடிக்கைகளை அதிகரிப்போம். காஷ்மீரிலுள்ள பயங்கரவாதிகளை அழிப்போம் என கூறினார்.
காஷ்மீர் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகளில் ஷகூர் அகமது பர்ரே என்பவர் முக்கியம் வாய்ந்தவர். அவர் சிறப்பு போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர். இதன்பின்னர் கான்ஸ்டபிள் ஆனார். நான்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளுடன் தப்பி சென்ற அவர் பயங்கரவாதிகளுடன் இணைந்து பின்னர் அல் பதர் என்ற குழுவை உருவாக்கி உள்ளார்.
10 இளைஞர்களை தனது குழுவில் அவர் சேர்த்து கொண்டார். அவர்களில் 5 பேர் கொல்லப்பட்டு விட்டனர் என திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.