அகர்தலா,
60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் வருகிற பிப்ரவரி 18ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பர்ஜாலா பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அவர் பிரசாரத்தின்பொழுது பேசுகையில், பாகிஸ்தான் மீது முதலில் தாக்குதல் நடத்த நாம் விரும்பவில்லை.
நமது அண்டை நாடுகளுடன் அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழவே நாம் விரும்புகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவச முறையில், ஜம்மு மற்றும் காஷ்மீரை தாக்க பாகிஸ்தான் முயற்சித்து கொண்டு இருக்கிறது. நமது படைகள் மற்றும் இந்திய எல்லைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது என பேசியுள்ளார்.
எல்லையை கடந்து பாகிஸ்தான் படையினர் ஒரு முறை சுட்டால் அவர்களை நோக்கி பதிலடியாக கணக்கற்ற முறையில் சுட்டு தள்ளுங்கள் என பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.
திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் நாட்டை பாரதீய ஜனதா கட்சியே முன்னேற்ற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.