ஆலந்தூர்,
திருச்சியை சேர்ந்தவர் சாமுவேல் திவாகர் (வயது 46). இவருக்கும், கம்ப்யூட்டர் என்ஜினீயரான பெண் ஒருவருக்கும் 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனைவி பணியாற்றியதால் சென்னையில் வசித்து வந்தார்.
இதற்கிடையில் பெண் என்ஜினீயர், சென்னை சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீசில் 2007-ம் ஆண்டு ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறி இருந்ததாவது:-
எனது கணவர், நான் குளிக்கும்போதும், உடை மாற்றும்போதும் என்னை ஆபாசமாக படங்கள் எடுத்தார். அந்த படங்களை இணையதளத்தில் வெளியிட்டு உல்லாசமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டு, அவரது செல்போன் எண்ணையும் வெளியிட்டு இருந்தார்.
இதற்கிடையில் திருச்சியை சேர்ந்த ஒருவர், செல்போனில் தொடர்புகொண்டு என்னை உல்லாசத்துக்கு அழைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், அவரை கடுமையாக திட்டி போன் இணைப்பை துண்டித்துவிட்டேன்
பின்னர் அந்த நபர் கூறிய இணையதள முகவரியில் சென்று பார்த்தபோது, அதில் எனது கணவர் என்னை ஆபாசமாக எடுத்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். எனவே சாமுவேல் திவாகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இதுபற்றி சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை பெருநகர 11-வது கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ராஜாகுமார் முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் 12 சாட்சிகள் சாட்சியம் அளித்தனர். சாமுவேல் திவாகருடன் விவாகரத்து ஆகிவிட்டதால் இந்த வழக்கில் ஆஜராகவில்லை என பெண் என்ஜினீயர் கூறிவிட்டார்.
அப்போது அரசு தரப்பு வக்கீல் மேரி ஜெயந்தி ஆஜராகி, 67 ஐ.டி. சட்டப்படி ஆபாச படத்தை காட்டி உணர்வுகளை தூண்டும் வகையில் இருந்ததால் தண்டனைக்குரியது. எனவே புகார்தாரர் சாட்சியம் அளிக்கவில்லை என்றாலும் அந்த படங்கள் உண்மையானவை. இதன் அடிப்படையில் உரிய தண்டனை வழங்கவேண்டும் என்ற ஆவணங்களை காட்டி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ராஜாகுமார், தீர்ப்பு வழங்கினார். அதில் பெண்கள் வன்கொடுமை, பெண்ணை ஆபாசமாக சித்தரித்தல், 67 ஐ.டி. சட்டம் ஆகிய பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சாமுவேல் திவாகருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் கொரோனா தொற்று காலத்திலும் உரிய முறையில் குற்றவாளிக்கு தண்டனை பெற உழைத்த சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீசாருக்கும், அரசு தரப்பு வக்கீலுக்கும் நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.