சிம்லா,
இமாசல பிரதேசம் சுற்றுலாவுக்கு பெயர் பெற்றதாகும். இந்தியாவில் இருந்து மட்டுமல்ல, உலகமெங்கும் இருந்து இங்கு சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். இந்த மாநிலத்தில் இனி, கொரோனாவுக்கு எதிராக 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே நுழைய முடியும் என மாநில அரசு தலைமைச் செயலாளர் ராம் சுபக் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு நாளை (13-ந் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. எனவே இனி இமாச்சல பிரதேசத்தில் 2 தடுப்பூசி போடாதவர்கள் நுழைய முடியாது. இது குறித்து ராம் சுபக் சிங் வெளியிட்ட அறிக்கையில், இமாசல பிரதேச மாநிலத்துக்கு வர விரும்பும் அனைத்து நபர்களும் 2 டோஸ் தடுப்பூசி போட்டு முடித்ததற்கான தடுப்பூசி சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்துக்கு முந்தைய கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன்தான் வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது. மாநில மந்திரிசபை கூட்டத்தில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.