தேசிய செய்திகள்

அசாம்: ஊடுருவல்காரர்களை பாஜகவால் மட்டுமே தடுக்க முடியும் - அமித்ஷா பேச்சு

ஊடுருவல்காரர்களை பாஜகவால் மட்டுமே தடுக்க முடியும் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.

கவுகாத்தி,

126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதி 47 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 39 தொகுதிகளுக்கும், முன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி 40 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் பட்ருதீன் ஜமால் என்பவரின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, அஞ்சலிக் ஞான மோட்சா, ராஷ்டிரிய ஜனதா தளம், போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடது சாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாஜக கூட்டணியில் அசோம் ஞான பரிஷத் கட்சி, ஐக்கிய மக்கள் விடுதலை கட்சி இடம்பெற்றுள்ளன. தற்போது அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதனால், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக-வினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, அக்கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் அசாமில் தொடர்ந்து பிரசாரம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அசாமின் கமரப் பகுதியில் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது,

ராகுல் காந்தியும், பட்ருதீன் ஜமாலும் அசாமை பாதுகாப்பாக வைத்துக்கொள்வார்களா? தளபதி லட்சித் போர்ப்குஹன் தலைமையில் நடைபெற்ற சரைஹட் போரின் (முகலாயர்கள் - அசாம் மன்னராட்சிக்கு இடையேயான போர்) நினைவுதினம் கடந்த வாரம் அனுசரிக்கப்பட்டது. தளபதி லட்சித் போர்ப்குஹன் தாய்நாட்டை (அசாம்) முகலாயர்களிடம் இருந்து பல ஆண்டுகள் பாதுகாத்தார்.

அசாமிற்கு சுற்றுலா பயணியாக வந்துள்ள ராகுல்காந்தி அசாமின் அடையாளம் பட்ருதீன் ஜமாலை கூறுகிறார். ஆனால், சங்கர்தேவ், மகாதேவ், லட்சித் போர்ப்குஹன் ஆகியோர் தான் அசாமின் அடையாளங்கள்.காங்கிரஸ் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்யலாம், ஆனால், பட்ருதீன் ஜமால் அசாமின் அடையாளமாக மாற நாங்கள் விடமாட்டோம்.

பட்ருதீன் ஜமாலின் ஆட்சி அமைந்துவிட்டால் ஊடுருவல்காரர்களை தடுக்க முடியுமா? பாஜகவால் மட்டுமே ஊடுருவல்காரர்களை தடுக்க முடியும். இரட்டை எஞ்சின் அரசு உதவியுடன் அசாமை வளர்ச்சியடைய செய்யலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆனால், பட்ருதீன் ஜமாலை கொண்டுவந்து இரட்டை ஊடுருவல்களுக்கு காங்கிரஸ் வழிவகுக்கிறது.

பட்ருதீன் ஜமால் நில ஜிகாத் செய்கிறார். 5 வருடத்திற்கு பின்னர் அசாமில் யாரும் நில ஜிகாத் செய்யமாட்டார்கள் என நான் உத்திரவாதம் அளிக்கிறேன் என்றார்.