கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 7 நாட்களாக 10 லட்சம் பேரில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 7 நாட்களாக 10 லட்சம் பேரில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ள நிலையில், நாடு முழுவதும் கடந்த 7 நாட்களாக 10 லட்சம் பேரில் ஒருவர் மட்டுமே கொரோனாவுக்கு உயிரிழந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

பல்வேறு உலக நாடுகளைப்போல இந்தியாவும் கொரோனாவால் பெரும் பாதிப்புகளை சந்தித்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 97 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஒரு நாளில் தொற்றுக்கு ஆளாகியிருந்த நாட்களும் உண்டு.ஆனால் தற்போது கொரோனாவில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிராக தினமும் நல்ல செய்திகளே வந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில் இந்தியாவின் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை கடந்த 12 நாட்களாக 300-க்கு கீழேயே இருந்து வருகிறது. இந்த வரிசையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்திலும் 264 பேர் மட்டுமே கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன்மூலம் நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்தை (1,50,114) கடந்திருக்கிறது. இது அதிர்ச்சியை அளித்தாலும், கடந்த 7 நாட்களாக நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 10 லட்சம் பேரில் வெறும் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பலியாகி வருவதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.

இது, கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பின் உறுதியையே காட்டுகிறது. அதைப்போல நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.45 சதவீதத்தினர் மட்டுமே மரணத்தைத் தழுவி இருக்கின்றனர்.

இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 88 பேர் புதிதாக கொரோனாவிடம் சிக்கி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 3 லட்சத்து 74 ஆயிரத்து 932 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்தியாவின் புதிய பாதிப்புகளை ஆய்வு செய்தபோதும், கடந்த 7 நாட்களாக 10 லட்சம் பேரில் வெறும் 96 பேர் மட்டுமே தொற்றிடம் சிக்கி வருவது தெரியவந்துள்ளது.

இது பிரேசில், ரஷியா, பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளை விட மிகவும் குறைவாகும்.

இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை வழக்கம்போல அதிகரித்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 314 பேர் புதிதாக குணமடைந்து உள்ளனர்.இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை (99,97,272) நெருங்கி விட்டது. ஒட்டுமொத்தமாக 96.36 சதவீதம்பேர் இதுவரை குணமடைந்து இருக்கிறார்கள்.

அதிகமான குணமடைதலும், குறைவான தினசரி பாதிப்புகளும், சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் தொடர்ந்து சரிய வைத்து வருகிறது. குறிப்பாக, கடந்த 16 நாட்களாக 3 லட்சத்துக்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று காலை நிலவரப்படி 2,27,546 நோயாளிகள் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். மொத்த பாதிப்பில் 2.19 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

புதிதாக குணமடைந்தவர்களில் 76.48 சதவீதம் பேர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,922 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர். மேலும் மராட்டியத்தில் 2,828 பேரும், சத்தீஸ்காரில் 1,651 பேரும் குணமடைந்துள்ளனர்.

இதைப்போல புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 79.05 பேர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதிலும் அதிகபட்சமாக 5615 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவர். மராட்டியர்கள் 3,160 பேரும், சத்தீஸ்கார்வாசிகள் 1,021 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் 9 லட்சத்து 31 ஆயிரத்து 408 சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் ஒட்டுமொத்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 17.74 கோடியாக அதிகரித்து உள்ளது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு