புதுடெல்லி,
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பதவியேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆட்சி தொடர்வதற்கு உறுதுணையாக இருந்த மக்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் நன்றி தெரிவித்தார்.
இது தொடர்பாக மோடி தனது டுவிட்டர் பதிவில், 2014 ம் ஆண்டு இதே நாளில் இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான எங்களின் பயணத்தை துவக்கினோம். கடந்த 4 ஆண்டுகளாக, இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஒவ்வொரு குடிமகனும் அளித்த ஒத்துழைப்பு காரணமாக வளர்ச்சி என்பது பேரியக்கமாக உருவெடுத்துள்ளது. 125 கோடி இந்தியர்களும் இந்தியாவை மிகப் பெரிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
பா.ஜ.க அரசு மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு தலைவணங்குகிறேன். இந்த ஆதரவும், அன்பும் தான் ஒட்டுமொத்த அரசின் வலிமை மற்றும் ஊக்கத்திற்கு காரணம். மக்களின் ஆதரவால்தான் மத்திய அரசு வலிமையாக செயல்பட முடிகிறது. இதே உத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பா.ஜ.க அரசு 5-வது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துள்ளார்.