லக்னோ,
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் 2019ஆம் ஜனவரி மாதம் 15- ம்தேதி கும்பமேளா நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அக்டோபர் மாதம் முதல் துவங்க உள்ளது.
சுமார் 10,000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர், போலீசார் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்தநிலையில், கும்பமேளா பாதுகாப்பிற்கு வரும் போலீசார் பணியாற்ற மது, புகைப்பிடித்தல் உள்ளிட்ட கெட்ட பழக்கம் இல்லாதவர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள நபர்கள், 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும், அவர்கள் காவல்துறையிடம் இருந்து நன்னடத்தை சான்று பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலகாபாத்தைச் சேர்ந்த போலீசார் யாரும் கும்பமேளா பாதுகாப்பிற்கு வேண்டாம் என கும்பமேளா நிர்வாகம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது.
கும்பமேளா பாதுகாப்பு பணி கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களில், கும்பமேளா நிர்வாகம் கூறி உள்ள தகுதிகளுடன் இருப்பவர்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும் என கும்பமேளாவிற்கான டிஐஜி கே.பி.சிங், மாவட்ட எஸ்எஸ்பி.,க்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.