திருவனந்தபுரம்,
கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அதிர வைத்த ஊழல், சோலார் பேனல் ஊழல் என்று அழைக்கப்படுகிற சூரிய மின் தகடு ஊழல்.
சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் தகடுகளை பதித்து தருவதாக மக்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்து ஏமாற்றி விட்டதாக சரிதா நாயர், பிஜூ ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தது. இந்த ஊழலில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு அப்போதைய முதல்-மந்திரி உம்மன் சாண்டி. மின்சார மந்திரி உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
விசாரணை கமிஷன்
இது தொடர்பாக நீதிபதி ஜி. சிவராஜன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து உம்மன் சாண்டி 2013-ம் ஆண்டு, அக்டோபரில் உத்தரவிட்டார்.
இந்த விசாரணை கமிஷன் 353 அமர்வுகள் நடத்தி, 214 சாட்சிகளை விசாரித்து, 972 ஆவணங்களை பரிசீலித்து தனது அறிக்கையை கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி கேரள அரசிடம் வழங்கியது.
சட்டசபை சிறப்பு கூட்டம்
இந்த அறிக்கையை தாக்கல் செய்வதற்காக கேரள சட்ட சபையின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. கேரள வரலாற்றில் ஒரு விசாரணை கமிஷன் அறிக்கையை தாக்கல் செய்வதற்கு சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடந்தது இதுவே முதல் முறை.
அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் எழுந்தபோது, இந்த கமிஷனின் அறிக்கை பற்றி அவர் ஏற்கனவே பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டது உரிமை மீறல் என்று கூறி எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பினராயி விஜயனோ அதை திட்டவட்டமாக மறுத்து, விசாரணை கமிஷன் அறிக்கையை தாக்கல் செய்து பேசினார்.
உம்மன்சாண்டி மீது குற்றச்சாட்டு
அப்போது அவர் கூறியதாவது:-
வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்கு சரிதா நாயருக்கும், அவரது கம்பெனிக்கும் முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டியும், அவரது அந்தரங்க உதவியாளரும் எல்லா உதவிகளையும் செய்துள்ளதாக விசாரணை கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சரிதா நாயர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்து இந்திய தண்டனைச்சட்டம், குற்றவியல் நடைமுறைச்சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்துவதற்கு கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.
செக்ஸ் இன்பம்
பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளுடன், குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுடன் அவர்கள் செக்ஸ் இன்பம் பெற்றதாகவும் கமிஷன் அறிக்கை சொல்கிறது.
இந்த செக்ஸ் இன்பம், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழான குற்றம் ஆகும்.
இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளதாக விசாரணை கமிஷன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் ஊழல் தடுப்புச்சட்டத்தின்கீழ் அரசாங்கம் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும்.
சிறப்பு புலனாய்வு குழு
விசாரணை கமிஷன் கண்டறிந்துள்ள உண்மைகள், சிபாரிசுகள் அடிப்படையில் சூரிய மின்தகடு ஊழலின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரம், கேரள அரசியலில் மீண்டும் பூகம்பத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.