புதுடெல்லி,
2014 ஆம் ஆண்டில் முதல் முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றவுடன் இந்தியாவில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் வழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் தூய்மை இந்தியா திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தினார்.
மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த அக்டோபர் 2-ந்தேதி சபர்மதி ஆற்றங்கரையோரத்தில் நடந்த தூய்மை இந்தியா வெற்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி, ''இந்தியாவில் உள்ள கிராமங்கள் இன்று திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை எட்டியுள்ளது. 60 மாதங்களில் 60 கோடி மக்களுக்காக 11 கோடிக்கும் மேலான கழிவறைகளை கட்டியுள்ளதைப் பார்த்து உலகமே ஆச்சர்யப்படுகிறது என கூறினார். மேலும் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நாடாக இந்தியாவை அறிவித்தார்.
ஆனால் துப்புரவு தொடர்பான சமீபத்திய தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்டு உள்ள ஆய்வில் மத்திய அரசின் முதன்மை தூய்மை இந்தியா திட்டத்தால் செய்யப்பட்ட திறந்தவெளி மலம் கழித்தல் இல்லா இந்தியா என்ற கூற்றுகளை மறுத்து உள்ளது. இருப்பினும் இது கிராமப்புறங்களில் கழிவறை பயன்படுத்துவதில் பெரும் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட தேசிய புள்ளிவிவர அலுவலக ஆய்வு முடிவில், சுமார் 71 சதவீத கிராமப்புற குடும்பங்கள் கழிவறைகளை பயன்படுத்துகின்றன என கூறப்பட்டு உள்ளது.
தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) நடத்திய சமீபத்திய உத்தியோகப்பூர்வ கணக்கெடுப்பின்படி, கிராமங்களில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமானோருக்கு கழிவறை வசதி இல்லை என கூறி உள்ளது.
குடிநீர், சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி நிலை அறிக்கையின்படி, கிராமப்புற குடும்பங்களில் 71.3 சதவீதமும், நகர்ப்புற குடும்பங்களில் 96.2 சதவீதமும் கழிவறைகளை பயன்படுத்துகின்றனர். கடந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பிரதமர் மோடி கிராமப்புற இந்தியாவை திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத இந்தியாவாக அறிவித்த ஒரு மாதத்திற்கு பிறகு இந்த ஆய்வு முடிவுகள் வந்துள்ளன.
தற்போதைய அரசின்கீழ் கழிவறை வசதி பெற்ற வீடுகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்திருப்பது உண்மை. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த கழிப்பறைகள் அனைத்தும் சரியாக இயங்கவில்லை அல்லது முறையாக பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்பதற்கு ஆதாரங்களும் உள்ளன.
திறந்த வெளியில் மலம் கழிக்காத இந்தியா திட்டத்தின்படி, ஜார்க்கண்டில் கிட்டத்தட்ட 42 சதவீத கிராமப்புற குடும்பங்களுக்கு கழிவறைகள் இல்லை. தமிழ்நாட்டில் அது 37 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 34 சதவீதமாகவும் இருந்தது.
திறந்த வெளியில் மலம் கழிக்காத இந்தியா திட்டம் முதலில் ஆரம்பிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில் அக்டோபர் 2017 இல், கிட்டத்தட்ட அனைத்து கிராமப்புற வீடுகளிலும் 25 சதவீததிற்கும் அதிகமாக கழிவறை வசதி இல்லை என்று இந்த ஆய்வு காட்டுகிறது.
அதுபோல் பட்டியலிடப்பட்ட பிற முக்கிய மாநிலங்களும் குறிப்பிடத்தக்க இடைவெளிகளைக் கொண்டிருந்தன. கர்நாடகா (30 சதவீதம்), மத்திய பிரதேசம் (29 சதவீதம்), ஆந்திரா (22சதவீதம்) மற்றும் மராட்டியம் (22 சதவீதம்) ஆகும்.
அக்டோபர் 2018 முதல் வாரத்தில், 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் திறந்த வெளியில் மலம் கழிக்காத இந்தியா திட்டம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் கழிவறையை அணுகுவது 95 சதவீதத்தை தொட்டதாகவும் தூய்மை இந்தியா திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
உண்மையில், 28.7 சதவீத கிராமப்புற குடும்பங்களுக்கு அந்த நேரத்தில் கழிவறை வசதி இல்லை என்று தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்து உள்ளது.
2012 ஆம் ஆண்டின் கடைசி கணக்கெடுப்பு காலத்தில் 71 சதவீத மக்கள் கழிவறைகளை பயன்படுத்தினர். இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருந்தது, கிராமப்புற குடும்பங்களில் 40 சதவீத மக்கள் மட்டுமே கழிவறைகளை பயன்படுத்தினர்.
கழிவறை பயன்பாடு குறித்த தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் புள்ளிவிவரங்கள் ஊக்கமளிக்கின்றன. கிராமப்புற இந்தியாவில் கழிவறைகளை அணுகக்கூடிய 95 சதவீத மக்கள் தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்துவதாக அது கூறியது, திறந்த வெளி மலம் கழிப்பதை மாற்றுவதற்கான தூய்மை இந்தியா திட்டத்தின் முயற்சிகள் பலனளித்தன என்பதைக் குறிக்கிறது.
கிராமப்புற இந்தியாவில் கழிவறை வசதி உள்ளவர்களில் 3.5 சதவீத மக்கள் மட்டுமே அவற்றை ஒருபோதும் பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளனர். 95 சதவீதத்துக்கும் அதிகமாக கழிவறையைச் சுற்றி தண்ணீர் கிடைக்கிறது என்பதற்கு இது உதவியது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான ஆய்வு ஒன்றில் பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட நான்கு வட இந்திய மாநிலங்களில் நான்கில் ஒருவர் வீட்டில் கழிவறைகள் இருந்தாலும் திறந்தவெளியில் தொடர்ந்து மலம் கழித்து வருகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.