திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது. நேற்றைய தினம் 21,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 179 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். தொற்று பரவலை கட்டுப்படுத்த கேரள மாநில அரசு பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் கேரளாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா தடுப்பூசி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓணம் பண்டிகை உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும் இந்த தடுப்பூசி மையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் இந்த மையத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம் என அவர் தெரிவித்தார்.