மும்பை,
மும்பையில் தனியார் சேனல் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே, நாட்டில் எதிர்க்கட்சிகள் சற்று பலவீனமாக இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், குஜராத் சட்டசபை தேர்தலுக்கு பின்பு, எதிர்க்கட்சிகள் வலிமை அடையும். எதிர்க்கட்சியில் கண்ணுக்கு புலனாக கூடிய மாற்றங்கள் வரும். ஒரு மாநிலத்தில் (குஜராத்) சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் உள்பட பெரும்பாலான மந்திரிகள் பிரசாரம் மேற்கொள்வதை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.
அது பிரதமரின் சொந்த மாநிலமாக இருந்தாலும், நாட்டின் தலைவர் ஒரு மாநிலத்துக்காக பிரசாரம் மேற்கொள்வது நல்லது அல்ல.
குஜராத்தில் பாரதீய ஜனதா தலைமையிலான அரசு நற்பணிகளை செய்து இருந்தால், அங்கு பிரசாரத்துக்காக ஏராளமான மந்திரிகளை களமிறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றார்.
மேலும் பேசுகையில் ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர், மத்திய அரசு ஏராளமான ரூபாய் நோட்டுகளை அச்சிட்டது. இதன் மூலம் பா.ஜனதா பயன் அடைந்தது என குற்றம் சாட்டினார். பா.ஜனதாவை தவிர, வேறு எந்த கட்சியிடமும் அதிகப்படியான நிதி கிடையாது. அவர்களுக்கு மட்டும் எவ்வாறு இவ்வளவு நிதி வருகிறது? என்று பொதுமக்கள் கேள்வி கேட்கட்டும் எனவும் குறிபிட்டார் ராஜ் தாக்கரே.