தேசிய செய்திகள்

பா.ஜனதாவை வீழ்த்த டெல்லியில் இன்று ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள்; பிரதமர் வேட்பாளர் யார்?

பா.ஜனதாவை வீழ்த்த டெல்லியில் இன்று 14 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகின்றன. இந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார்? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் பெரும் கூட்டணியை உருவாக்குவது குறித்து விவாதிக்க டெல்லியில் இன்று எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டம் நடத்துகின்றன . இதில் 2019 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்க இருக்கிறார்கள். 2019-ல் பா.ஜ.க.வை எதிர்க்க ஒரு குடையின் கீழ் எதிர்க்கட்சிகளைக் கொண்டு வருவதற்கான பணியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு உள்ளார்.

காங்கிரஸ், தி.முக, தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ராஷ்டீரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஆம்ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி, மதச்சார்பற்ற லோக் தந்திரிக் ஜனதா தளம் (சரத்யாதவ் கட்சி) ஆகிய கட்சிகளுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்து உள்ளார்.

மாநிலங்களில் செல்வாக்கு மிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் ஒரே இடத்துக்கு வந்து இருப்பதால் இது பா.ஜ.க.வுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும்.

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவருமே மாநில அரசியலிலும், தேசிய அரசியலிலும் அனுபவம் பெற்றவர்கள். முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.

கூட்டணி குறித்த ஆலோசனைக்கு மத்தியில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்று இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. பிரதமர் ரேஸில் இருக்கும் தலைவர்கள் குறித்து இவர்கள் விவாதம் நடத்தவும், தலைவர் ஒருவரை தேர்வு செய்யவும் வாய்ப்புள்ளது.

இந்த ஆலோசனையில் 90 சதவிகித எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள உள்ளது. இதனால் இந்த சந்திப்பு பெரிய கவனம் பெற்று உள்ளது.

இந்த கூட்டணியின் தலைவராக தகுதி இருக்கும் நபர்கள் என்று 6 பெயர்கள் விவாதத்தில் வைக்கப்படுகிறது. ராகுல் காந்தி, மாயாவதி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் ஆகிய 6 பேரில் ஒருவர்தான் இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முடியும் என்று விவாதம் செய்யப்படுகிறது. இதில் யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்விதான் தற்போது எழுந்துள்ளது.

இதில் பலர் பொதுவாக முணுமுணுக்கும் பெயர் ராகுல் காந்திதான். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் இங்கு மாநில தலைவர் என்ற அடையாளம் இல்லாமல் தனித்து இருக்கிறார். மற்ற தலைவர்கள் எல்லோரும் முன்னாள் இந்நாள் மாநில முதல்வர்கள். இதனால் தேசிய அடையாளம் கொண்ட, தேசிய கட்சியின் தலைவரே பிரதமர் வேட்பாளர் ஆவது சரி என்று இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் இந்த ரேஸில் சில முக்கிய தலைவர்கள் பிரச்சினை செய்யவோ, இல்லை பிரதமர் வேட்பாளர் பதவியை கேட்கவோ ஆசைப்படலாம் என்று கூறப்படுகிறது. மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகிய இருவரும் ஏற்கனவே பிரதமர் கனவில் இருக்கிறார்கள். இவர்களுக்கும் ராகுலுக்கும் உறவு அத்தனை நல்லபடியாக இல்லை. இதனால் இன்று இவர்கள் எதாவது பிரச்சினை செய்யவும் வாய்ப்புள்ளது.

அதனால் 2019 தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி களமிறக்க போகும் அந்த வேட்பாளர் யார் என்று இன்று தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது. சமயங்களில் அப்படி வேட்பாளர் பெயர் எதையும் அறிவிக்காமலேயே கூட தேர்தலை சந்திக்க எதிர்கட்சிகள் முடிவெடுக்க வாய்ப்பு இருக்கிறது. எந்த முடிவாக இருந்தாலும் இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.