டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற தி.மு.க., கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி 
தேசிய செய்திகள்

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்

டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைப்பகுதிகளில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு மத்தியில் குடியரசு தினத்தில் டெல்லிக்குள் அவர்கள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போராட்டம் நடைபெறும் டெல்லி எல்லைப்பகுதிகளில் விவசாயிகளை சுற்றி வளைத்து போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர். வெளியில் இருந்து யாரும் உள்ளே நுழையாதவாறும், உள்ளேயிருந்து வெளியே வர முடியாதவாறும் பல அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

எதிர்க்கட்சிகள் ஆதரவு

விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவை அளித்து உள்ளன. இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் குரலெழுப்பி வரும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுமாறு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை கண்ணியத்துடன் நடத்துமாறும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.

எம்.பி.க்கள் சந்திக்க சென்றனர்

இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்திப்பதற்காக, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சுமார் 20 பேர் நேற்று காலை காஜிப்பூர் எல்லைக்கு ஒரு வேனில் சென்றனர். இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகிய மத்திய மந்திரியும், சிரோமணி அகாலிதள எம்.பி.யுமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் இந்த குழுவை ஒருங்கிணைத்தார்.

இந்த குழுவில் ஹர்சிம்ரத் கவுர் பாதலுடன், சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), கனிமொழி, திருச்சி சிவா (தி.மு.க.), சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்டு), திருமாவளவன், ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்), சவுகதா ராய் (திரிணாமுல் காங்கிரஸ்) மற்றும் தேசிய மாநாடு, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் இடம்பெற்றிருந்தனர்.

போலீசார் தடுத்து நிறுத்தினர்

இந்த எம்.பி.க்கள் குழு போராட்டக்களத்தை அடைந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டக்களத்தை சுற்றி அமைத்துள்ள தடுப்பு வேலியை கடந்து அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

எனினும் போலீசாருடன் சண்டையிட்டு சிறிது தூரம் எம்.பி.க்கள் முன்னேறினர். இருப்பினும் விவசாயிகளை சந்தித்து பேசவிடாமல் எம்.பி.க்களை போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனர். இதனால் எம்.பி.க்கள், அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி அங்கிருந்து திரும்பினார்கள்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கனிமொழி குற்றச்சாட்டு

போலீசாரின் இந்த நடவடிக்கைகள் குறித்து கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

யாரும் உள்ளே போக முடியாத அளவுக்கு போலீசார் தடுத்திருக்கிறார்கள். எதிரி நாட்டு படைகளை தடுத்து நிறுத்தினால் எப்படி இருக்குமோ, அதுபோன்ற ஒரு நிலை உள்ளது. இந்த பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு உள்ளன.

விவசாயிகளின் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் பேசவும் அரசு மறுக்கிறது. ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் உரையாற்ற எங்களுக்கு விருப்பம் இல்லை. விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி பேச தனிநேரம் வேண்டும் என்று கேட்கிறோம். ஆனால் அவர்கள் மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார்.

திருமாவளவன் வேதனை

இதைப்போல விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன்எம்.பி கூறும்போது, இங்கு அன்னிய நாட்டு எல்லையில் இருப்பதுபோன்ற தோற்றம் இருக்கிறது. ஏராளமான துணை ராணுவப்படையினரை குவித்துள்ளனர். கிட்டத்தட்ட 3 கி.மீ. தூரத்துக்கு தடுப்புகளை போட்டு தடுத்துள்ளனர். நாங்கள் போலீசாருடன் சண்டை போட்டுத்தான் கொஞ்ச தூரம் உள்ளே வந்தோம். உடனே வெளியே செல்ல வற்புறுத்தினார்கள். மோடி அரசு ஏதேச்சதிகார அரசாக இருக்கிறது. குடிமக்களுக்கு எதிரான அரசாக இருக்கிறது. சொந்த நாட்டு குடிமக்களையே பகைவர்களாக கருதும் அளவுக்கு ஒரு மேலாதிக்கம் செலுத்தும் அரசாக உள்ளது என்று வேதனை தெரிவித்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு