புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடியின் பிஏ, எம்ஏ பட்டப் படிப்பு சான்றிதழ் குறித்து ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2016-ம் ஆண்டில் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, அப்போதைய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடியின் பிஏ, எம்ஏ பட்டப்படிப்பு சான்றிதழ்களை செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
இதனிடையே ஆம் ஆத்மி நிர்வாகி நீரஜ் சர்மா ஆர்டிஐ சட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் பிஏ கல்வி சான்றிதழை கோரி டெல்லி பல்கலைக்கழகத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து மத்திய தகவல் ஆணையத்தில் நீரஜ் சர்மா மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த அப்போதைய தகவல் ஆணையர் ஆச்சார்யலு, பிரதமர் மோடியின் பிஏ கல்வி சான்றிதழை வழங்க டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த ஐகோர்ட்டு, தகவல் ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இறுதி உத்தரவை தேதி குறிப்பிடாமல் கோர்ட்டு ஒத்திவைத்தது. இந்த நிலையில், மேற்கூறிய வழக்கில் இன்று தீர்ப்பளித்த டெல்லி ஐகோர்ட்டு, மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்துள்ளது.