இந்தூர்,
அரியானா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதுபற்றி கருத்து தெரிவித்த பா.ஜனதா பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியதாவது:-
அரியானா தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததற்கு நமது குறைபாடுகளே காரணம். பா.ஜனதா போட்டி வேட்பாளர்களை சரிக்கட்ட நாம் தவறிவிட்டோம். முதல்- மந்திரி கட்டார் வளர்ச்சிக்கு பாடுபட்டார். ஆனால் நாம் இதனை வாக்காளர்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துவர தவறிவிட்டோம். தேர்தல் முடிவு முழுமையாக வந்ததும் நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
இறுதி முடிவு வெளியானதும் நாம் ஆட்சி அமைப்போம் என கருதுகிறேன். ஒருவேளை பெரும்பான்மை கிடைக்காவிட்டால் எதிர்கால நடவடிக்கை பற்றி ஆலோசிப்போம். குதிரை பேரத்தில் ஈடுபடமாட்டோம். வெற்றிபெற்ற போட்டி வேட்பாளர்கள் நமது கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.