தேசிய செய்திகள்

மே.வங்காளத்திற்கு வந்துகொண்டிருந்த ஆக்சிஜன் விநியோகம் உ.பிரதேசத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது - மம்தா குற்றச்சாட்டு

மேற்குவங்காளத்திற்கு வந்துகொண்டிருந்த ஆக்சிஜன் விநியோகம் உத்தரபிரதேசத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது என்று மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொல்கத்தா,

இந்தியாவில் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா தடுப்பூசி தடுப்பாடு, ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆக்சிஜன் டேங்கர்களை மற்ற மாநில அரசுகள் தடுத்து நிறுத்துவதாக குற்றஞ்சாட்டி வருகின்றன. குறிப்பாக, டெல்லிக்கு ஒதுக்கப்பட்ட ஆக்சிஜன் டேங்கரை தங்கள் மாநிலத்தில் இருந்து வெளியே விட அரியானா போன்ற மாநில அரசுகள் தடுப்பதாக டெல்லி முதல்மந்திரி கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி வருகிறார்.

இந்நிலையில், தங்கள் மாநிலத்திற்கு வந்துகொண்டிருந்த ஆக்சிஜன் உத்தரபிரதேசத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி இன்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மம்தா கூறுகையில், மேற்குவங்காளத்திற்கு வந்துகொண்டிருந்த ஆக்சிஜன் விநியோகம் உத்தரபிரதேசத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஆக்சிஜன் விநியோகம் சரிவர பராமரிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் எங்கிருந்து ஆக்சிஜன் பெறுவது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.