புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் மிகக்கடுமையாக உள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக பதிவாகி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
பல மாநிலங்களில் ஊரடங்குக்கு நிகரான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாட்டில் இதுவரை 14.78 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 25 லட்சத்திற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கு போடப்பட்டது. வரும் மே 1 ஆம் தேதி 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.