புதுடெல்லி,
இந்தியாவில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 21 ஆம் தேதி முதல் புதிய தடுப்பூசி திட்டத்தின் படி, மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை 7 மணி வரையிலான தடுப்பூசி கையிருப்பு நிலவரம் குறித்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியதாவது:- "கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக 86.16 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. உலகளவில் ஒரேநாளில் 86 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவது இதுவே முதன்முறை. நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 28.87 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நேரடிக் கொள்முதல் மூலம் உள்பட மொத்தம் 29.35 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் வீணானவை உள்பட மொத்தம் 27,20,14,523 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலங்களின் கையிருப்பில் இன்னும் 2.14 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் உள்ளன. மேலும் 33,80,590 தடுப்பூசிகள் அடுத்த 3 நாள்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.