தேசிய செய்திகள்

25 லட்சத்தை கடந்தது, தொற்று பாதிப்பு - இந்தியாவில் ஒரே நாளில் 65 ஆயிரம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 65 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த தொற்று பாதிப்பு 25 லட்சத்தை கடந்து விட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா, இந்த 8 மாத காலத்தில் 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளை தன் பிடியில் கொண்டு வந்துள்ளது.

இதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்க வல்லரசு உள்ளது. அங்கு 53.13 லட்சம் பேருக்கு தொற்று பாதித்துள்ளது, 1.68 லட்சம் பேரை பலி கொண்டும் இருக்கிறது என அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசிலில் 32.26 லட்சம் பேரை கொரோனா தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வந்துள்ளது. 1.05 லட்சம் பேரை உயிரிழக்கவும் வைத்து இருக்கிறது.

இவ்விரு நாடுகளைத் தொடர்ந்து கொரோனாவின் ஆவேச பார்வை இந்தியா பக்கம் தீவிரமாக திரும்பி உள்ளது.

இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 65 ஆயிரத்து 2 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடும்போது (64 ஆயிரத்து 553) நேற்று பாதிப்பு சற்று அதிகம். இதன் மூலம் நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை என்பது 25 லட்சத்தை கடந்து விட்டது. சரியாக 25 லட்சத்து 26 ஆயிரத்து 192 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். நேற்று முன்தினம் தொற்று பாதிப்பு 24 லட்சத்தை கடந்து, நேற்று 25 லட்சத்தை கடந்து இருப்பது சற்றே அதிர வைப்பதாக உள்ளது.

அதே நேரத்தில் நேற்று முன்தினம் இந்தியாவில் 1,007 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று உயிரிழப்பு சற்றே தணிந்து 996 ஆகி இருக்கிறது. இந்த 996 பேரில் 346 பேர் மராட்டிய மாநிலத்தினர் ஆவர். மராட்டியத்தை தொடர்ந்து தமிழகம் அதிக உயிர்ப்பலிகளை கொண்டுள்ளது.

மற்ற மாநிலங்களைப் பொறுத்தமட்டில், கர்நாடகத்தில் 104 பேர், ஆந்திராவில் 97 பேர், மேற்கு வங்காளத்தில் 60 பேர், உத்தரபிரதேசத்தில் 55 பேர், பஞ்சாப்பில் 25 பேர், பீகார், சத்தீஷ்கார், மத்தியபிரதேசம் ஆகியவற்றில் தலா 16 பேர், குஜராத்திலும், ஜார்கண்டிலும் தலா 15 பேர், ராஜஸ்தானில் 13 பேர், டெல்லியிலும், ஜம்மு காஷ்மீரிலும் தலா 11 பேர், கேரளாவிலும், ஒடிசாவிலும், தெலுங்கானாவிலும் தலா 10 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

அரியானாவில் 7 பேரும், அசாமில் 6 பேரும், புதுச்சேரியிலும், திரிபுராவிலும், உத்தரகாண்டிலும் தலா 4 பேரும், அந்தமான் நிகோபாரிலும், கோவாவிலும், தலா 2 பேரும், அருணாசலபிரதேசத்திலும், சண்டிகாரிலும் தலா ஒருவரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை கொரோனாவால் பலியான 49 ஆயிரத்து 36 பேரில் மராட்டிய மாநிலத்தவர் 19 ஆயிரத்து 427 ஆவர். தமிழகம், பலியில் இரண்டாம் இடம். மூன்றாவது இடத்தில் உள்ள டெல்லியில் 4,178 பேர் இறந்துள்ளனர்.

பிற மாநிலங்களில், கர்நாடகத்தில் 3,717 பேரும், குஜராத்தில் 2,746 பேரும், ஆந்திராவில் 2,475 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,335 பேரும், மேற்கு வங்காளத்தில் 2,319 பேரும், மத்திய பிரதேசத்தில் 1,081 பேரும் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாக பதிவாகி உள்ளது.

ராஜஸ்தானில் 846, பஞ்சாப்பில் 731, தெலுங்கானாவில் 684, ஜம்மு காஷ்மீரில் 520, அரியானாவில் 518, பீகாரில் 442, ஒடிசாவில் 324, ஜார்கண்டில் 224, அசாமில் 175, உத்தரகாண்டில் 147, கேரளாவில் 139, சத்தீஷ்காரில் 130, புதுச்சேரியில் 106 பேர் இறந்துள்ளனர்.

கோவாவில் 93 பேரும், திரிபுராவில் 50 பேரும், சண்டிகாரில் 28 பேரும், அந்தமான் நிகோபாரில் 24 பேரும், இமாசலபிரதேசத்தில் 19 பேரும், மணிப்பூரில் 13 பேரும், லடாக்கில் 9 பேரும், நாகலாந்தில் 8 பேரும், மேகாலயாவில் 6 பேரும், அருணாசலபிரதேசத்தில் 5 பேரும், தத்ராநகர் ஹவேலி தாமன் தியுவில் 2 பேரும், சிக்கிமில் ஒருவரும் மரணம் அடைந்துள்ளனர்.

பலியானவர்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பிற நாள்பட்ட நோய்களுடன் கொரோனாவும் தாக்கி, உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் சொல்கிறது.

இந்தியாவில் நேற்று வரை 18.08 லட்சம் பேர் கொரோனாவை தோற்கடித்து, ஆஸ்பத்திரிகளில் இருந்து வெற்றிகரமாக வீடு திரும்பி உள்ளனர். நாட்டில் தற்போது 6.68 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையை தொடர்கின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்