புதுடெல்லி,
நாடு முழுவதும் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகளை அவசரகால தேவைக்கு பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. கொரோனா 2வது அலைக்கு பின் மக்களிடையே தடுப்பூசி போட்டு கொள்ளும் ஆர்வம் அதிகரித்தது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதுபற்றி மத்திய சுகாதார துறை வெளியிட்ட செய்திகுறிப்பில், நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை 58,31,73,780 கொரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவச அடிப்படையில் வழங்கி உள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 56,29,35,938 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதுதவிர, கூடுதலாக 81,10,780 தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட உள்ளன. ஏறக்குறைய 38,00,030 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.