தேசிய செய்திகள்

அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியாவில் முதன்முதலாக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு அனுமதி?

இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு முதன்முதலாக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் கோர முகம் கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து வருகிறது. இருப்பினும் இங்கிலாந்தில் 70 சதவீதம் அதிவேகமாக பரவக்கூடிய இந்த வைரசின் புதிய வடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு இந்திய மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்குவதற்கு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்தியாவில் பாரத் பயோடெக் (கோவேக்சின் தடுப்பூசி), இந்திய சீரம் நிறுவனம் (ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு தடுப்பூசி), பைசர் மற்றும் பயோ என்டெக் (எம்ஆர்என்ஏ தடுப்பூசி) ஆகிய 3 நிறுவனங்களும் அவசர கால பயன்பாட்டு அனு மதியை கோரி இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிக்கு இந்த மாத தொடக்கத்தில் விண்ணப்பித்துள்ளன.

கடந்த 9-ந்தேதி மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப் பின் (சிடிஎஸ்சிஓ) வல்லுனர் குழு, இந்திய சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கான தரவுகளை கேட்டது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து உருவாக்கி, இந்தியாவில் தான் தயாரித்து வழங்குகிற கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பான கூடுதல் தரவுகளை சீரம் நிறுவனம் கடந்த வாரம் வழங்கி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே இந்த தடுப்பூசி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்த தடுப்பூசியின் உபயோகத்துக்கு இங்கிலாந்தில் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு எந்த நேரத்திலும் அனுமதி அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இங்கிலாந்தின் அனுமதியை இந்தியா எதிர்பார்த்து காத்திருக்கிறது.

அப்படி இங்கிலாந்தில் அனுமதி அளிக்கப்பட்ட உடனேயே, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) வல்லுனர் குழு கூடி, அந்த தடுப்பூசி மீது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தரவுகளை ஆய்வு செய்யும்.

அதைத்தொடர்ந்து இந்த தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டு அனுமதி வழங்கப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அனேகமாக அடுத்த வாரம் இந்த அனுமதி கிடைத்து விடும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. அப்படி வழங்கப்பட்டு விட்டால், இந்தியாவில் அவசர கால பயன்பாட்டு அனுமதி பெறும் முதல் கொரோனா தடுப்பூசி என்ற பெயரை ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத் பயோடெக் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசியின் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாலும், பைசர் தடுப்பூசி இன்னும் தனது விளக்க காட்சியை வழங்காத நிலையிலும், அவ்விரண்டு தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டு அனுமதி வழங்குவது சற்றே தாமதிக்கும் என தெரிகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு