புதுடெல்லி,
பத்மாவத் திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் கர்னி சேனா அமைப்பினர் ராஜஸ்தான், குஜராத், உத்தரபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர். பத்மாவத் படத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பின்னணியில் பா.ஜனதா உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிஉள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜனதா தலைமையிலான அரசுக்கள் நடவடிக்கையை எடுப்பதில் தோல்வியை தழுவிவிட்டன என காங்கிரஸ் விமர்சனம் செய்து உள்ளது.
பத்மாவத் போராட்டம் வன்முறையாகிய நிலையில் சட்டம் மற்றும் ஒழுங்கு மாநிலங்கள் சம்பந்தப்பட்டது என மத்திய அரசு கூறிஉள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநில அரசுக்களின் பொறுப்பாகும், இதில் மத்திய படைகளை வழங்குவது தவிர்த்து மத்திய அரசின் பணி எதுவும் கிடையாது என உள்துறை அமைச்சக அதிகாரி கூறிஉள்ளார். திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடைபெறும் பகுதிகள் மற்றும் கூட்டு வன்முறை தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ள பகுதிகளில் மாநில அரசுக்கள் ஆயுதம் தாங்கிய சிறப்பு போலீஸ் படையை நிலை நிறுத்த வேண்டும் என அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர்.