புதுடெல்லி
பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம், பத்மாவதி. வியாகாம் 18 என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மத்திய பிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த படத்துக்கு தடையும் விதித்து உள்ளன. இந்த படத்துக்கு தணிக்கைக்குழு இன்னும் சான்றிதழ் வழங்காததால் வருகிற 1ந்தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்த தயாரிப்பு நிறுவனம், தற்போது வெளியீட்டு தேதியை தள்ளிவைத்து உள்ளது.
இந்த நிலையில் வெளிநாடுகளில் பத்மாவதி படத்தை திரையிட தடை விதிக்கக் கோரி மனோகர் லால் சர்மா மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
மேலும் சுப்ரீம் கோர்ட் ஒரு திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் முன் பொது வாழ்வில் உள்ளவர்கள் எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது. தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் முன் கருத்து தெரிவிப்பது, திரைப்பட தணிக்கை துறையை அவமதிக்கும் செயல் ஆகும் என சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்து உள்ளது.