இஸ்லமாபாத்,
எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் இதில் பாகிஸ்தான் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக குற்றம் சாட்டியுள்ள பாகிஸ்தான், இச்சம்பவம் தொடர்பாக இந்திய துணைத்துதரை நேரில் அழைத்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தானின் பொது இயக்குநர்( தெற்காசியா மற்றும் சார்க் நாடுகள்) முகம்மது பைசல், இந்திய துணைத்தூதர் ஜேபிசிங்கை நேரில் அழைத்து பாகிஸ்தானின் கண்டனத்தை பதிவு செய்ததாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் மேலும் கூறியிருப்பதாவது:- கரேலா செக்டாரில் இந்திய ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தியது.
பொதுமக்களை திட்டமிட்டே குறிவைத்து இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் எல்லையோரம் வசிக்கும் அப்பாவி பெண் ஒருவர் பலியானார். மற்றொரு பெண் படுகாயம் அடைந்தார். இந்திய ராணுவத்தின் செயல் மனித கண்ணியத்திற்கும் சர்வதேச மனித உரிமைக்கும் முரணானது. 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்திய ராணுவம் உரிய மரியாதை அளித்து எல்லையில் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை தீர்மானத்தின் படி ஐநா ராணுவ கண்காணிப்புக்குழுவை இந்திய அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.