கவுகாத்தி,
இந்தியாவுடனான பகையுணர்வை பாகிஸ்தான் இன்னமும் மறக்கவில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறினார்
அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மோகன் பாகவத் கூறியதாவது:- நாடு சுதந்திரம் பெற்றபோது, தனி நாடு வேண்டும் என்று போராட்டம் நடைபெற்றது. அதன் விளைவாக, பாகிஸ்தான் தனி நாடு உதயமானது. அதன் பிறகு, பாகிஸ்தான் உடனான பகையுணர்வை இந்தியர்கள் மறந்துவிட்டனர். ஆனால், பாகிஸ்தானியர்கள் இன்னமும் மறக்கவில்லை. இதுதான் இந்துக்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான வேறுபாடு ஆகும்.
மனிதநேயம் பற்றி பலரும் பேசுகிறார்கள். ஆனால், அதன்படி நடப்பதில்லை. மனிதநேயப் பண்புகளை இந்தியா உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்கிறது. இந்துத்துவ உணர்வை இந்தியர்கள் மறந்தால், இந்த நாட்டுடன் அவர்கள் கொண்டிருக்கும் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடும். மெகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நமது பழங்கால கலாச்சாரங்கள் மேம்பட்ட இடங்கள் தற்போது பாகிஸ்தானில் உள்ளன. பன்முகத்தன்மையிலும் இந்தியா ஒற்றுமைத்தன்மையோடு இருப்பதற்கு இந்துத்வாவே காரணம் என்றார்.