ஜம்மு,
காஷ்மீரின் பூஞ்ச், ரஜவுரி மாவட்ட வனப்பகுதிகளில் கடந்த 14 நாட்களாக தீவிரமாக பயங்கரவாதிகள் ஒழிப்பு வேட்டை நடக்கிறது. இதில் ராணுவத்தை சேர்ந்த 9 பேர் பலியாகி உள்ளனர். பயங்கரவாதிகள் பலரும் கொல்லப்பட்டு உள்ளனர்.
நேற்று பூஞ்ச் மாவட்டத்திற்கு உட்பட்ட பாட்டா டுர்ரியன், மென்டார் வனப்பகுதியில் பயங்கர துப்பாக்கி சண்டை மற்றும் வெடிகுண்டுவீச்சு நடந்தது. ரஜவுரியின் தன்னமண்டி பகுதியிலும் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை நடந்தது.
மென்டாரில் நடந்த துப்பாக்கி சண்டையில் ஜியா முஸ்தபா என்ற பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பயங்கரவாதி கொல்லப்பட்டார். இவர், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக முன்பு ஒருமுறை கைது செய்யப்பட்டு இருந்தார். தற்போது மென்டார் வனப்பகுதியில் பதுங்கியிருந்து பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கி சண்டையிட்டபோது மரணம் அடைந்துள்ளார். இந்த சண்டையில் 2 போலீஸ்காரர்கள் மற்றும் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை தொடர்கிறது.