ஜம்மு,
பாகிஸ்தான் படையினர், நேற்று முன்தினம் இரவில் திடீரென்று போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் தொடுத்தனர். ஹிராநகர் செக்டாரில் உள்ள பன்சார், மன்யாரி, கரோல் கிருஷ்ணா போன்ற இடங்களில் சர்வதேச எல்லைக்கோடு அருகே இரவு 9.50 மணி அளவில் திடீர் தாக்குதல் தொடுக்கப்பட்டது. அதிகாலை 4.15 மணிவரை இந்த தாக்குதல் தொடர்ந்தது.
ஆனால் உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. ஒரு மர்ம டிரோன் விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது சுடப்பட்டதாக எல்லைக்காவல் படை அதிகாரி தெரிவித்தார். ஆனால் அது திரும்பி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
மன்யாரி கிராமத்தை சேர்ந்த ஒருவர், கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தான் அத்துமீறலால் இங்கு 12 வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் கிராம பகுதிகளை குறிவைத்து நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது