ஜம்மு,
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அண்மைக்காலமாக பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறல் அதிகரித்துள்ளது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுக்கிறது. இந்த நிலையில், ஜம்முவில் உள்ள மான்கோட் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இன்று மாலை 5 மணிக்கு பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதலில் யாரும் உயிரிழந்ததாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. பூஞ்ச் மாவட்டம் கிருஷ்னகாதி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் 15 நிமிடங்கள் தாக்குதல் நடத்தியதாக ராணுவம் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். ஜனவரி 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தொடர் அத்துமீறிய தாக்குதலில், 4 பொதுமக்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பாகிஸ்தானின் தொடர் அத்துமீறிய துப்பாக்கிச்சூட்டால் சர்வதேச எல்லையையொட்டியுள்ள சுமார் 300 பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.