தேசிய செய்திகள்

பாமாயில், மண்எண்ணெய்க்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்: ஜி.எஸ்.டி. கூட்டத்தில் அமைச்சர் டி.ஜெயகுமார் வலியுறுத்தல்

டெல்லியல் நடந்த ஜி.எஸ்.டி. மன்ற கூட்டத்தில் பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் பாமாயில், மண்எண்ணெய் மற்றும் விவசாய கருவிகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் டி.ஜெயகுமார் கோரிக்கை விடுத்து பேசி உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) மன்றத்தின் 39-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் தமிழக மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார் கலந்து கொண்டார். கூட்டத்தில் ஜி.எஸ்.டி. வரி வருவாய் குறித்து ஆலோசனை நடந்தது.

இதில் 2017-2018-ம் ஆண்டிற்கு வரவேண்டிய தொகை மற்றும் நடப்பு நிதியாண்டிற்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என்று அமைச்சர் டி.ஜெயகுமார் வேண்டுகோள் விடுத்தார்.

கூட்டத்தில் சட்டக்குழுவின் பல்வேறு பரிந்துரைகள் குறித்தும், வணிகர்களுக்கான ஜி.எஸ்.டி. நடைமுறைகளை எளிமைப்படுத்துவது மற்றும் வருவாயை பெருக்குவதற்கும், ஜி.எஸ்.டி. சட்டம் மற்றும் விதிகளில் திருத்தம் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வரி செலுத்துவோர் தாமதமாக வரி செலுத்தும் போது நிகர இருப்பின் மீது வட்டி விதிக்கப்படுவதற்கு அண்மையில் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆண்டொன்றுக்கு ரூ.2 கோடிக்கு மேல் மொத்த விற்பனை அளவு கொண்டுள்ள வரி செலுத்துவோர் அனைவரும் ஆண்டு கணக்கு விவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வரம்பை 2018-2019-ம் ஆண்டு மட்டும் ரூ.5 கோடியாக உயர்த்த சட்டக்குழு பரிந்துரைத்திருந்தது. இது சிறு வணிகர்களுக்கு பயன் அளிக்கும் என்பதால், இதனை முதல்-அமைச்சர் ஏற்கலாம் என தெரிவித்து உள்ளார்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் கீழ் ஜவுளி, காலணி, செல்போன், உரங்கள் போன்ற பொருட்கள் தலைகீழான வரி கட்டமைப்பு கொண்டுள்ளன. இதனால் தொழில் செய்பவர்களுக்கு இடர்பாடுகள் ஏற்படுவதுடன் வரி திருப்புத் தொகையும் (ரீபண்டு) வழங்கப்பட வேண்டி உள்ளது. இதனை சீர் செய்யும் விதமாக பல்வேறு பரிந்துரைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இந்த கருத்துருக்களில் துணி மற்றும் ஆயத்த ஆடை மீதான வரியானது 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதம் ஆக உயர்த்துவது ஏற்புடையது அல்ல என்ற கருத்து கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

உரங்கள் மீதான வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்துவது குறித்த கருத்துருவும் விவாதிக்கப்பட்டது. ஆனால், வரி உயர்வினால் உரங்கள் மீதான விலை அதிகரிக்கும் என்பதால் இந்த கருத்துரு முற்றிலும் ஏற்புடையதாக இல்லை என்று அமைச்சர் டி.ஜெயகுமார் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார்.

கையால் செய்யப்படும் தீக்குச்சிகளுக்கு 5 சதவீதம் மற்றும் எந்திரம் மூலம் தயாரிக்கப்படும் தீக்குச்சிகளுக்கு 18 சதவீதம் என்ற அளவில் வரி விதிக்கப்படுகிறது. இதனை ஒரே சீராக 12 சதவீதம் வரி விதிக்கலாம் என்ற தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையின் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

வணிகப்பிரதிநிதிகள், வணிக சங்கங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரப்பெற்றுள்ள, மேலும் பல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு தொடர்பான கோரிக்கைகளும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

விவசாய நடவடிக்கைகள் தொடர்பான சேவைகளுக்கு வரி விலக்களித்தல், மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு விலக்களித்தல், சிட் நிதி தொடர்பான சேவைகளுக்கு மற்றும் ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியம் மீது விலக்களித்தல், நெல் குற்றுகை சேவைகளுக்கு வரி விலக்களித்தல், நுண்நீர் பாசன கருவிகளுக்கு வரிவிலக்கு மற்றும் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாமாயில் மற்றும் மண்எண்ணெய் ஆகியவற்றுக்கு வரிவிலக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது