புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. 1-ந் தேதி 2019-20 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பியூஸ் கோயல் தாக்கல் செய்தார்.
கூட்டத்தொடரின் கடைசி நாள் நேற்று நடந்தது. மக்களவை கூடிய உடன் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்திய விவகாரம் தொடர்பாக அந்த கட்சியினர் பிரச்சினை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். பின்னர் ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவு சின்ன சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. இறுதியில் சபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் நிதித்துறை மந்திரி சிவபிரதாப் சுக்லா ஒதுக்கீட்டு மசோதாவையும், நிதி மசோதாவையும் கொண்டு வந்தார். அவை குரல் ஓட்டு மூலம் நிறைவேறின. பின்னர் தொழுநோயை விவாகரத்து செய்வதற்கு ஒரு காரணமாக கூறலாம் என்ற அம்சத்தை நீக்குவதற்கு தனிச்சட்ட திருத்தங்கள் மசோதா, மாநிலங்களவையில் விவாதம் இன்றி நிறைவேறியது. அதைத் தொடர்ந்து மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், மாநிலங்களவை தொடர்ந்து முடங்கியதால் முத்தலாக் தடை மசோதாவும், குடியுரிமை மசோதாவும் நிறைவேறாமல் ஜூன் 3-ந் தேதியுடன் காலாவதி ஆகின்றன.