புதுடெல்லி,
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வழக்கில் தொடர்புடைய நிரவ் மோடியை பாஜக அரசு பாதுகாப்பதாக கூறி, காங்கிரஸ் எம்.பிக்கள் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிரவ் மோடி, விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனத்தை கலைக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் எம்.பிக்கள் கோஷம் இட்டனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொண்டார்.
நிரவ் மோடி விவகாரத்தில் பாரதீய ஜனதாவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வார்த்தைப்போர் முற்றியுள்ளது. வங்கி மோசடி குற்றவாளிகளை பாதுகாப்பதாக பாஜக மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ஆனால், இந்த மோசடிகள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே நடைபெற்றது என்று பாஜக பதிலடி கொடுத்து உள்ளது.