தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் ‘பிரியங்கா வரவால் காங்கிரஸ் கட்சி பலன் அடையும்’ சிவசேனா கருத்து; பா.ஜனதா நிராகரிப்பு

பிரியங்கா வரவால் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பலன் அடையும் என்று சிவசேனா கட்சி கூறி உள்ளது. அதை பா.ஜனதா கட்சி நிராகரித்து உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்காவை, கட்சியின் பொதுச்செயலாளராக நியமித்துள்ளார்.

இதன் மூலம் பிரியங்கா நேரடி அரசியலில் குதித்துள்ளார். அவர், மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் மாநிலமாக உள்ள உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதியை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரியங்காவின் நேரடி அரசியல், வரும் நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுக்கும் என அந்தக் கட்சியினர் கருதுகின்றனர். ஆனால் பாரதீய ஜனதா கட்சியினர், பிரியங்காவின் வருகையை குடும்ப கூட்டணி என விமர்சித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா, பிரியங்காவுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவுத், இதுபற்றி கூறுகையில், பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வந்த 3 முக்கிய மாநிலங்களை காங்கிரஸ் கட்சி கடந்த மாதம் கைப்பற்றியதில் இருந்தே நான் பிரியங்காவின் அரசியல் வருகையை எதிர்பார்த்தேன். கடந்த 2 மாதங்களாகவே காங்கிரஸ் கட்சிக்கு நல்ல நேரம் வந்து சேர்ந்ததை கவனித்துக்கொண்டிருந்தேன். அதில் இருந்து பிரியங்கா, உத்தரபிரதேச அரசியலில் குதிப்பார் என உணர்ந்தேன். இது ராகுல் காந்தி எடுத்த நல்ல முடிவு. இந்திரா காந்தி குடும்பத்துடன் இந்த நாடு நல்ல உறவு கொண்டிருந்தது. அது தொடரும். இதன்மூலம் காங்கிரஸ் கட்சி பலன் அடையும் என குறிப்பிட்டார்.

கூட்டணி கட்சியான சிவசேனாவின் கருத்தை நிராகரிக்கிற வகையில், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான மனோஜ் சின்கா, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணியில் இடம் இன்றி காங்கிரஸ் கட்சி கழற்றி விடப்பட்டுள்ளது. இதனால் அங்கு காங்கிரஸ் கட்சியின் நிலைமை மோசமாகி உள்ளது. இந்த தருணத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அந்த மாநிலத்தில் முக்கியத்துவத்தை பெறுவதற்கான முயற்சிதான் பிரியங்கா வரவு ஆகும்.

பிரியங்காவுக்கு ஆதரவான கருத்தை சிவசேனா கட்சி கூறி இருப்பது, அதன் தனிப்பட்ட கருத்து ஆகும்.

காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா டெல்லியில் நியமிக்கப்பட்டுள்ளார். நீங்கள் அதை இங்கு விவாதித்து வருகிறீர்கள். ஆனால் அவர் எந்த பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ளாரோ அங்கு யாரும் அதை கவனத்தில் கொள்ளவில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்கா வரவு, எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நாடாளுமன்ற தேர்தல் மோதல், வேறு வகையிலானது. இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு