தேசிய செய்திகள்

‘இந்திய பகுதியை சீனாவிடம் மோடி விட்டுக்கொடுத்துவிட்டார்’ ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு

இந்திய பகுதியை சீனாவிடம் மோடி விட்டுக்கொடுத்து விட்டார் என்று ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கிழக்கு லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனப்படைகள் கடந்த ஆண்டு மத்தியில் இருந்து தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வந்தபோது, இந்தியப்படைகளும் சரியான பதிலடி கொடுத்தன. அதைத் தொடர்ந்து இரு தரப்பும் படைகளையும், தளவாடங்களையும் குவித்து வந்தன. இதனால் அங்கு போர்ப்பதற்றம் நிலவி வந்தது.

இதற்கு மத்தியில் அங்கு அமைதியையும், சமாதானத்தையும் நிலை நாட்டுவதற்காக இரு தரப்பு ராணுவம் மற்றும் தூதரக ரீதியிலான பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தன.

இந்த நிலையில் திடீர் திருப்புமுனையாக எல்லையில் நிலவி வந்த 9 மாத மோதல்களை முடிவுக்கு கொண்டு வர ஏதுவாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது கிழக்கு லடாக்கில் பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இரு தரப்பு படைகளை வாபஸ் பெறவும், கட்டுமானங்களை அகற்றவும் வழிவகுத்துள்ளது.

இதை நேற்று முன்தினம் மாநிலங்களவையிலும், மக்களவையிலும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, சீனாவுடன் தொடர்ந்து நடத்தி வருகிற பேச்சுவார்த்தைகளில் இந்தியா எதையும் விட்டுக்கொடுத்து விடவில்லை. இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக்கூட யாருக்கும் விட்டுக்கொடுத்து விட மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்திய பகுதியை விட்டுக்கொடுத்தார் மோடி

இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் ஒரு அறிக்கை அளித்துள்ளார். இந்தியப்படைகள் பிங்கர்-3 பகுதியில் நிறுத்தப்படும் என கூறி உள்ளார்.

பிங்கர்-4 நமது பகுதி ஆகும். அதை நாம் பயன்படுத்த வேண்டும். ஆனால் நாம் பிங்கர்-4 பகுதியில் இருந்து பிங்கர்-3 பகுதிக்கு நகர்ந்து இருக்கிறோம்.

பிரதமர் மோடி ஏன் இந்திய பகுதியை சீனாவுக்கு விட்டுக்கொடுத்து விட்டார்? இது, அவரும், ராணுவ மந்திரியும் பதில் அளிக்க வேண்டிய கேள்வி ஆகும்.

இந்தியப்படைகள் கடினமான உழைப்பின்மூலம் கைலாஷ் எல்லைகளை கைப்பற்றிய பிறகு, ஏன் அங்கிருந்து பின்வாங்குமாறு கூறப்பட்டனர்? இதற்கு ஈடாக இந்தியா பெற்றது என்ன? மிக முக்கியமான பகுதியான தெப்சாங் சமவெளியில் இருந்து சீனப்படைகள் ஏன் பின்வாங்கவில்லை? இவைதான் உண்மையான கேள்விகள். அவர்கள் ஏனு கோக்ரா ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து நகர வில்லை?

இந்த நாட்டின் பகுதியை பாதுகாக்க வேண்டியது பிரதமரின் பொறுப்பு ஆகும். ஆனால் பிரதமர் இந்திய பகுதியை சீனாவுக்கு விட்டுக்கொடுத்துள்ளார்.

இதன் தொடக்கத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு, கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ந் தேதி இருந்ததை போன்று இருந்தது. அதற்காகத்தான் அவர்கள் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்தார்கள். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்..

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்