பனாஜி,
இந்தியாவின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக கோவா மாநிலம் விளங்கி வருகிறது. இங்குள்ள கடற்கரைகளில் தினமும் இரவு நேரங்களில் நடனம், இசை உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அரங்கேறுகிறது. இதில் மது மற்றும் போதைப்பொருள் வினியோகிக்கப்படுவதாக தெரிகிறது.
தற்போது 4 நாட்கள் தொடர் விடுமுறை காலம் என்பதால் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவாவுக்கு சென்றுள்ளனர். அதன்படி கோவையை சேர்ந்த பிரவின் சுந்தரம் (வயது 28) என்ற வாலிபர் தனது நண்பர் ஒருவருடன் கோவா சென்றிருந்தார்.
திடீர் உடல்நல குறைவு
இவர்கள் வடக்கு கோவாவின் வெகேட்டர் கடற்கரையில் கடந்த 12-ந் தேதி நள்ளிரவில் நடந்த இசை மற்றும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது அதிகப்படியான போதைப்பொருளை பிரவின் பயன்படுத்தியதாக தெரிகிறது. இதனால் அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.
மூச்சுவிடுவதற்கு மிகவும் சிரமப்பட்ட அவர் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவா மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கோவையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கேரள வாலிபர்
இதற்கிடையே வடக்கு கோவாவின் அஞ்சுனா பகுதியில் அதே நாளில் நடந்த நள்ளிரவு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த நிதின் அப்துல்லா (20) என்ற வாலிபரும் அதிக அளவிலான போதைப்பொருளை எடுத்துக்கொண்டதாக தெரிகிறது. இதனால் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிதின் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து கோவா மருத்துவ கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் மரணமடைந்தார். அவர் தனியாகவே கோவாவுக்கு வந்திருப்பதாக தெரிவித்த போலீசார், அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவித்தனர்.
இந்த 2 பேரின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகப்படியான போதைப்பொருள் காரணமாகவே இருவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என்பதை மறுப்பதற்கு இல்லை என்று தெரிவித்த போலீசார், எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே உண்மை நிலவரம் தெரியவரும் எனக் கூறினர். மேலும் சம்பவத்தின் போது இருவரும் மது அருந்தியிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அரசு உத்தரவு
சுற்றுலா வந்த இடத்தில் அதிகப்படியான போதைப்பொருளால் 2 வாலிபர்கள் உயிரிழந்திருப்பது கோவா அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே வடக்கு கோவா பகுதியில் நடைபெற்று வரும் போதைப்பொருள் விற்பனையை ஒடுக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதைப்போல மாநில நீர்வளத்துறை மந்திரியும், உள்ளூர் எம்.எல்.ஏ.வுமான வினோத் பல்யேகர், தனது தொகுதியில் நடைபெற்று வரும் வெளிப்புற விருந்து நிகழ்ச்சிகள் அனைத்தையும் தடுத்து நிறுத்துமாறு வடக்கு கோவா போலீஸ் சூப்பிரண்டை கேட்டுக்கொண்டுள்ளார்.