தேசிய செய்திகள்

முதல் வகுப்பு ஏ.சி. ரெயில் பெட்டியில் போர்வைகளை திருட முயன்ற பயணிகள்; மடக்கிப் பிடித்த அதிகாரிகள்

போர்வைகளை தங்கள் பைகளில் வைத்து எடுத்துச் செல்ல முயன்ற பயணிகள் அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.

தினத்தந்தி

புவனேஸ்வர்,

ரெயில்களில் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக, இந்திய ரெயில்வே நிர்வாகம் சார்பில் படுக்கை விரிப்புகள் மற்றும் போர்வைகள் வழங்கப்படுகின்றன. இந்த போர்வைகள் ரெயில்வே ஊழியர்களால் சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இவற்றை பயணிகள் தங்கள் பயணத்தின்போது பயன்படுத்திவிட்டு, பயணத்தின் முடிவில் ஊழியர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

இந்த நிலையில், சமீபத்தில் முதல் வகுப்பு ஏ.சி. ரெயில் பெட்டியில் பயணித்த பயணிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட போர்வைகளை திருடிச் செல்ல முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒடிசா மாநிலம் புரியில் இருந்து டெல்லி வரை செல்லும் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த குடும்பத்தினர், ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான போர்வைகளை தங்கள் பைகளில் வைத்து எடுத்துச் செல்ல முயன்றபோது அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. டிக்கெட் பரிசோதகர் அந்த குடும்பத்தினரிடம், போர்வைகளை எதற்காக எடுத்துச் செல்கிறீர்கள்? என்று கேட்டபோது, அந்த குடும்பத்தைச் சேர்ந்த நபர், எங்களுக்கு இதுபற்றி தெரியாது. எங்கள் தாய் தவறுதலாக இதனை பையில் எடுத்து வைத்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, போர்வைகளை ஒப்படையுங்கள், அல்லது ரூ.780 அபராதம் செலுத்துங்கள் என்று ஒரு அதிகாரி கூறினார். பின்னர் அந்த குடும்பத்தினர் போர்வைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து இது குறித்து ரெயில்வே நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த குடும்பத்தினரை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை