நகரி,
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஆந்திர மாநிலம் முழுவதும் தனது ஜனசேனா கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி ஆவார். தற்போது அங்கு தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
சிரஞ்சீவியின் மைத்துனரும், படத் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்தின் மகன் அல்லு அர்ஜூன். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் அல்லு அர்ஜூன், கர்னூல் மாவட்டம் நந்தியால் சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் சில்பா ரவிச்சந்திர கிஷோர் ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அவர் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்தும் தெரிவித்து இருந்தார்.
பவன் கல்யாணின் உறவினரான அல்லு அர்ஜூன், அவருடைய கட்சிக்கு எதிராக செயல்படுவது தெலுங்கு சினிமா மற்றும் அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.