தேசிய செய்திகள்

செல்போன் ஒட்டு கேட்கும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது: ஜே.பி.நட்டா

செல்போன் ஒட்டுகேட்கும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உறுதிபட தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

செல்போன் ஒட்டு கேட்பு

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் தயாரித்த பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், மத்திய மந்திரிகள், நீதிபதி என 300-க்கும் மேற்பட்ட பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டுகேட்க இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன. இதனால் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து நாடாளுமன்ற அலுவல்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு மறுப்பு

எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமும் அளித்து இருந்தார்.இதன் தொடர்ச்சியாக பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் மறுத்து உள்ளார். கோவாவில் 2 நாள் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்து இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பெகாசஸ் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

விவாதிக்க தயார்

அதற்கு அவர் பதிலளிக்கையில், எதிர்க்கட்சிகள் கூறும் செல்போன் ஒட்டு கேட்கும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அது ஒரு பிரச்சினையும் இல்லை. மக்களுக்காக எழுப்புவதற்கு காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளிடம் எந்த பிரச்சினையும் இல்லை. எனவே இது போன்ற பிரச்சினைகளை எழுப்புகின்றனர் என்று தெரிவித்தார்.அவர் மேலும் கூறும்போது, நாடாளுமன்றத்தில் அனைத்து விதமான விவாதங்களுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளுக்கு எழுப்புவதற்கு எந்த பிரச்சினையும் இல்லாததால், அவர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனவே ஒன்றுமில்லா பிரச்சினைகளுக்காக நாடாளுமன்ற அலுவல்களை முடக்கி வருகின்றனர் என்று குறைகூறினார்.

ஆக்கபூர்வ செயல்பாடு

எனினும் அவர்கள் எவ்வளவு முயன்றாலும் பிரதமர் மோடியின் தனித்துவமிக்க தலைமையின் கிழ் நாடாளுமன்ற செயல்பாடுகள் அனைத்து ஆக்கபூர்வமாக இருந்து வருவது மக்களுக்கு தெரியும் என்று கூறிய ஜே.பி.நட்டா, மக்களவை, மாநிலங்களவை அலுவல்கள் அனைத்து சாதனைகளையும் முறியடித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை