புதுடெல்லி,
ராமர் கோவில் கட்டுவதற்காகவே பாஜக தலைமயிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தனர் எனவும் முத்தலாக் தடை சட்டம் கொண்டு வருவதற்கு அல்ல எனவும் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரவீன் தொகாடியா கூறியதாவது:- "கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிக்கு வாக்களித்தது அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதற்காகத்தான். முத்தலாக் தடைச்சட்டம் இயற்றுவதற்காக மக்கள் பாஜகவுக்கு வாக்கு அளிக்கவில்லை.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான சட்டத்தை மத்திய அரசு விரைவில் இயற்ற வேண்டும். கட்டிடத்தை உடனடியாக கட்ட வேண்டும். முத்தலாக் தடைச் சட்டத்தை இயற்றுகிறார்கள் அல்லது நிறைவேற்றாமல் போகிறார்கள். ஆனால், ராமர் கோயில் கட்டுவதற்காக தனியாக சட்டத்தை இயற்ற வேண்டும்.
நாங்கள் நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கிறோம். இந்துக்கள் நீண்ட காலமாக ராமர் கோவில் கட்டப்படும் என காத்திருக்கிறார்கள். எனவே, ராமர் கோவில் கட்டப்பட வேண்டும். புதிதாக ஒரு சட்டம் இயற்றி ராமர் கோயில் கட்டும் பணியை மத்திய அரசு தொடங்க வேண்டும் கோயில் அருகே எந்த மசூதியும் இருக்கக் கூடாது என்றார்.