புதுடெல்லி
இந்தியாவை கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் உலுக்கி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று சூழலை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என துவக்கம் முதலே ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், இன்று ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
கொரோனா தடுப்பூசி மருந்து ஆராய்ச்சிக்காக மருந்து நிறுவனங்களுக்கு மக்களின் பணம் தரப்பட்டது.
இப்போது, இந்திய அரசானது அதே மக்களை, இந்த மருந்துகளுக்காக உலகிலேயே மிக அதிக விலையைத் தர வைக்கிறது.
தோற்றுப்போன இந்த சிஸ்டம் மீண்டும் ஒருமுறை, மோடியின் நண்பர்களுக்காக நம் நாட்டு மக்களைத் தோற்கச் செய்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.
இதுதொடர்பான சில மேற்கோள்களையும் சுட்டிக்காட்டியுள்ளார் ராகுல்காந்தி.
கோவாக்சின் தடுப்பூசி மருந்து தயாரிப்புக்காக பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ரூ. 65 கோடி மானியத்தையும் (மக்கள் பணத்தை) 3 அரசு நிறுவனங்களின் உதவியையும் மத்திய அரசு வழங்கியது.
ஆனால், அரசு உதவி பற்றி கண்டுகொள்ளாமல் விலை பற்றிக் குறிப்பிட்டுள்ள இந்த நிறுவனம், தன்னுடைய உற்பத்தியில் 50 சதவீதத்துக்கும் கூடுதலாக ரூ. 150 விலையில் மத்திய அரசுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது. மாநிலங்களுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் அதிக விலைக்கு விற்கப்படுவதன் மூலம் நிறுவனத்தின் பிற தடுப்பூசி மருந்து ஆராய்ச்சிமற்றும் தயாரிப்புகளுக்கு உதவியாக இருக்கும்.
தனியாருடைய லாபத்துக்காக அரசுத் தொழில்நுட்பம் இலவசமாக அளிக்கப்பட்டதா என்ற பொருளியல் வல்லுநரின் கேள்வியையும் ராகுல்குறிப்பிட்டுள்ளார்.
பாரத் பயோடெக்கிற்கு அளிக்கப்பட்ட மக்கள் பணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோவேக்சின், யாருடைய அறிவுசார் உரிமை? இந்தியா பதிலை எதிர்பார்க்கிறது என்றொரு கேள்வியையும் குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.