தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியது

கொரோனா தடுப்பூசியின் 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனைக்கு இந்திய மருத்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஆட்கொல்லி நோயான கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பும், மாடர்னா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசி இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது. ரஷியா தடுப்பூசி தயாராகிவிட்டதாக கூறி இருக்கிறது.

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கு மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த தடுப்பூசிக்கு இந்தியாவில் கோவிஷீல்டு என்று பெயரிடப்பட்டு உள்ளது.

கொரோனா வைரசை வீழ்த்துவதற்கான ஆன்டிபாடிகளையும், டி செல்களையும் ஒரு சேர இந்த தடுப்பூசி உருவாக்குவது இரட்டை பாதுகாப்பு என விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சார்பில் தென்ஆப்பிரிக்காவில் இந்த தடுப்பூசியின் முதல் 2 கட்ட பரிசோதனைகள் முடிந்துவிட்டன. இங்கிலாந்தில் 2-வது மற்றும் 3-வது கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் 2-வது மற்றும் 3-வது கட்ட பரிசோதனையை நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே நடைபெற்ற பரிசோதனை முடிவு மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருந்ததை தொடர்ந்து, இந்தியாவில் மனிதர்களிடம் 2-வது மற்றும் 3-வது கட்ட பரிசோதனையை மேற்கொள்ள அனுமதி கோரி சீரம் இன்ஸ்டிடியூட், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு விண்ணப்பித்தது.

முதல் கட்ட பரிசோதனை முடிவின் அம்சங்களை ஆய்வு செய்த நிபுணர் குழு வழங்கிய சிபாரிசுகளின் அடிப்படையில், 2-வது மற்றும் 3-வது கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரி டாக்டர் வி.ஜி.சோமானி நேற்று முன்தினம் இரவு அனுமதி அளித்ததாக நேற்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். 3-வது கட்ட பரிசோதனையை தொடங்கும் முன் சீரம் இன்ஸ்டிடியூட் தடுப்பூசியின் பாதுகாப்பு தன்மை குறித்த பாதுகாப்பு தரவு கண்காணிப்பு வாரியத்தின் மதிப்பீட்டு அறிக்கையை சீரம் இன்ஸ்டிடியூட் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்களுக்கு தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்ட 29-வது நாளில் அடுத்த ஊசி போடப்படும் என்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தடுப்பூசியின் பாதுகாப்பு தன்மை, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை ஆய்வு செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

2-வது மற்றும் 3-வது கட்ட பரிசோதனைகளுக்கு அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் இந்தியா முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 1,600 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தி பரிசோதிக்க இருக்கிறது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, புனேயில் உள்ள பி.ஜே.மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, கோரக்பூரில் உள்ள நேரு ஆஸ்பத்திரி உள்ளிட்ட 12 நகரங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இந்த சோதனை நடைபெற இருக்கிறது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்