புதுடெல்லி,
தமிழகத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்படாததால் இவ்வாண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலையே நீடித்தது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என அனைவரும் நினைத்த நிலையில் மாறாக ஜல்லிக்கட்டு விஷயத்தில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.
இந்த ஆண்டு போட்டியை எப்படியும் நடத்தியே தீரவேண்டும் என பலதரப்பில் வலியுறுத்தப்பட்டது. மாணவர்கள், இளைஞர்கள் என தமிழக மக்கள் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தின்போது பீட்டா அமைப்பை தடை செய்யவேண்டும் என்று முக்கிய கோரிக்கையுடன், இளைஞர்கள், மாணவர்கள் கோஷங்களை போட்டனர். தமிழ்நாட்டில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும் விதமாக அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பீட்டாவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்படுவதைப் போல கர்நாடக மாநிலம் மங்களூருவில் கம்பளா விளை யாட்டு (சேற்றில் எருமை காளையை விரட்டி செல்வது) கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விலங்கு நல அமைப்பினர் இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட போது, கம்பளா விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் போன்று கர்நாடகாவிலும் போராட்டம் தொடங்கியது. அம்மாநில அரசும் கம்பளா போட்டியை நடத்தும் வகையில் சட்டம் கொண்டு வந்தது.
இந்நிலையில் தமிழகத்தின் ஜல்லிக்கட்டு சட்டம், கர்நாடகாவின் கம்பளா சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாட உள்ளதாக பீட்டா தெரிவித்து உள்ளது. இருமாநில சட்டங்களையும் தனித்தனியாக அல்லது இணைந்து எதிர்ப்பது என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை என பீட்டா தெரிவித்து உள்ளது. பீட்டா இந்தியாவின் கால்நடை விவகார இயக்குநர் மணிலால் வாலியாதே பேசுகையில், இரு மாநில அரசுக்களும் கொண்டுவந்து உள்ள சட்டத்தை நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்போம்.இதனை அடுத்த சில நாட்களில் செய்வோம். இரு மாநில அரசுக்களின் சட்டங்களை தனித்தனியாக அல்லது கூட்டாக எதிர்ப்பதாக என்பது தொடர்பாக எங்களுடைய வழக்கறிஞர்களிடம் ஆலோசனை செய்து வருகிறோம், என்று கூறிஉள்ளார்.
தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் விலங்குகள் நல வாரியங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக கடந்த ஜனவரி 31-ம் தேதி விசாரணை நடைபெற்ற போது தடை விதிக்க மறுத்துவிட்டது.