மும்பை,
மராட்டியத்தின் மும்பை நகரில் போரிவாலி பகுதியில் சஞ்சய் காந்தி தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஏரி ஒன்றும் உள்ளது. இந்த நிலையில், உதய் பின்கர் (வயது 32) என்பவர் தனது 4 நண்பர்களுடன் ஏரி அமைந்த பகுதிக்கு நேற்று பிக்னிக் சென்றுள்ளார்.
அவர் மதுபானம் குடித்ததில் போதை அதிகரித்து உள்ளது. இந்நிலையில், மெதுவாக நடந்து சென்று ஏரியை அடைந்த அவர் அதனுள் குதித்துள்ளார். நீரில் மூழ்கிய அவர் தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டு உள்ளார்.
ஆனால், திங்கட்கிழமை பூங்காவுக்கு பொது விடுமுறை விடப்படும். இதனால் பூங்கா மூடப்பட்டு இருந்துள்ளது. பூங்காவில் பொதுமக்கள் இல்லாத நிலையில், இவரது கூச்சல் சத்தம் கேட்டு காப்பாற்ற வர யாரும் இல்லை. இதனால், அவர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளார்.
இதன்பின் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மும்பை போலீசார் 3 மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின்பு அவரது உடலை வெளியே கொண்டு வந்தனர். அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.