கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விமானிகள் மற்றும் கேபின் குழுவினர் 48 மணி நேரத்திற்கு விமானங்களில் பறக்கமாட்டார்கள் என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடக்கின்றன. விமானிகள் மற்றும் விமான கேபின் குழுவினர் இந்த தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் ஊசி போட்ட 30 நிமிடங்கள் வரை எதிர்விளைவுகள் ஏதும் உள்ளதா என அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். அதேபோல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விமானிகள் மற்றும் கேபின் குழுவினர் அடுத்த 48 மணி நேரத்திற்கு விமானத்தில் பறக்க மருத்துவ ரீதியாக தகுதியில்லாதவர்கள் என கருதப்படுவர். எனவே அவர்கள் விமானத்தில் பறக்க அனுமதி இல்லை. அதன் பிறகு பணிக்கு வரும் அவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்கு டாக்டர்களிடம் அனுப்பி வைக்கப்படுவர். அத்தகைய விமானிகள் எந்தவொரு மருந்துகளும் இல்லாமல் அறிகுறியற்றவர்களாக இருந்தால், அவர்கள் பறப்பதற்கு தகுதியானவர்கள் என்று அறிவிக்க முடியும், மேலும் இது பெற மருத்துவ பாதுகாப்பு சான்றிதழ் அவசியம் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.