ராஞ்சி,
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) சார்பில் நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மங்கல்யான், சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா உள்ளிட்ட திட்டங்கள் மூலம் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதே சமயம், இஸ்ரோவின் கனவு திட்டங்களில் ஒன்றான விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பிர்லா தொழில்நுட்ப கல்லூரியின் 35-வது பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் மற்றும் மதிப்பீடுகள் குறித்து அவர் கூறியதாவது;-
பிரதமர் நரேந்திர மோடி 2040-ம் ஆண்டுக்குள் இந்தியர்களை நிலவில் தரையிறங்க வைக்கும் திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். இந்த திட்டமானது இந்தியர்களை நிலவில் தரையிறக்கி மீண்டும் அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப கொண்டு வருவதற்கான திட்டமாகும். மேலும், வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கான வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் (VOM) திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கான விண்வெளி நிலையத்தை உருவாக்கும் திட்டத்தின்படி, பாரதிய அந்திரிக்ஷ் நிலையம் (BAS) 2035 ஆம் ஆண்டில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான ஆரம்ப தொகுதிகள் 2027-ம் ஆண்டிலேயே விண்வெளியில் கட்டமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'ககன்யான்' திட்டத்தில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்னும் சில சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன், ஆளில்லாத 3 பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதன்படி 'வியோம்மித்ரா' ரோபோ இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பயணத்தை மேற்கொள்ள உள்ளது. அடுத்த ஆண்டு மேலும் இரண்டு ஆளில்லாத பயணங்கள் நடைபெறும். தொடர்ந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டம் 2027, முதல் காலாண்டில் சாத்தியமாகும்.
சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா-எல்1 விண்கலம், ஏற்கனவே 15 டெரா பைட்டுகளுக்கும் அதிகமான தரவுகளை அனுப்பியுள்ளது, சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெளிப்படும் கொரோனல் நிறை வெளியேற்றங்கள் மற்றும் விண்வெளி வானிலை பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை அந்த தரவுகள் நமக்கு வழங்குகின்றன.
இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) மூலம் விண்வெளி துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு, விண்வெளி துறையில் ஒருசில சிறு நிறுவனங்கள் மட்டுமே நம்மிடம் இருந்தன. ஆனால் இன்று, செயற்கைக்கோள் உற்பத்தி, ஏவுதள சேவைகள் மற்றும் விண்வெளி தரவு பகுப்பாய்வு ஆகியவற்றில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன.
விவசாயம், பேரிடர் மேலாண்மை, தொலைத்தொடர்பு, நிகழ்நேர ரெயில் மற்றும் வாகன கண்காணிப்பு மற்றும் மீன்வளம் ஆகியவற்றில் செயற்கைக்கோள் அடிப்படையிலான பணிகளுக்கு இந்தியாவில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கு இந்த மாற்றம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
நிலவில் மனிதர்களை தரையிறக்குவது போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு நமது ஏவுதளத் திறனையும், விண்வெளி உள்கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டும். நமது விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கான பணிகளை நாம் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். 35 கிலோவை விண்ணில் செலுத்தியதில் இருந்து தொடங்கி, இப்போது 80,000 கிலோவை விண்ணில் செலுத்துவது குறித்து கற்பனை செய்யும் அளவிற்கு மாபெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
35 ஆண்டுகளுக்கு முன்பு கணினி புரட்சி குறித்து யாரும் கற்பனை செய்து பார்க்காதது போல், விண்வெளி ஆய்வு துறையின் அடுத்த சகாப்தத்தை செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் வரையறுக்கும். இன்று இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. விண்வெளித் துறையில் உலகளாவிய அளவுகோல்களை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், பெரும்பாலும் அந்த அளவுகோல்களைக் கடந்து நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
சந்திரயான்-1 மூலம் நிலவில் தண்ணீரைக் கண்டுபிடித்தது முதல், சந்திரயான்-3 மூலம் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் முதல் முறையாக மென்மையான தரையிறக்கத்தை நிகழ்த்தியது வரை, இந்தியா விண்வெளியில் பல உலக சாதனைகளைப் படைத்துள்ளது. SPADEX திட்டத்தின் வெற்றியின் மூலம் விண்வெளியில் டாக்கிங் நடைமுறையை வெற்றிகரமாக நிறைவேற்றிய நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளது.
பிரதமர் மோடியின் தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும், விண்வெளி துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மூலம், தன்னம்பிக்கை மற்றும் துடிப்பான விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பின் கனவை நனவாக்குவதை நோக்கி நம்பிக்கையுடன், தெளிவாக இஸ்ரோ முன்னேறி வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.