சென்னை
தேவைக்கேற்ற வகையில் ரெயில் சேவை இயக்கப்படும் என்றும், ரெயில் சேவையை நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று ரெயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும்,ரெயில்வே வாரிய தலைமை செயல் அதிகாரி சுனீத் ஷர்மா கூறியதாவது:-
திடீரென ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவோ, ரெயில்கள் பயணத்தின் பாதியில் நிறுத்தப்படுவதாகவோ அறிவிக்கப்படாது. நாட்டில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப, ரெயில் சேவை இயக்கப்படும். ரெயில் சேவையில் எந்தப் பற்றாக்குறையும் இல்லை, ரெயில் சேவையை நிறுத்தும் திட்டமும் இல்லை.
2021ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் அதிகப்படியான கூட்டத்தைக் குறைக்க அதிகமான ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். பயணிகள் கூட்ட நெரிசல் இருக்கும் கோராக்பூர், பாட்னா, வாராணசி, குவகாத்தி, ராஞ்சி, லக்னோ உள்ளிட்ட பகுதிகளுக்கு மத்திய ரெயில்வேயில் 58 ரெயில்களும், மேற்கிந்திய ரெயில்வேயில் 60 ரெயில்களும் இயக்கப்பட உள்ளன.
தற்போது 1,400 விரைவு ரெயில்களும், 5,300 புறநகர் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 800 பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனை மாநிலங்களின் முடிவுகளுக்கு ஏற்ப அதிகரிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மராட்டிய மாநிலத்தில், கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், அங்கு ரெயில் சேவையைக் குறைப்பது குறித்தோ, ரத்து செய்வது குறித்தோ மாநில அரசிடமிருந்து எந்த பரிந்துரையும் வரவில்லை.
ரெயில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகம். எனவே, அனைவரிடமும் கொரோனா இல்லை என்ற சான்றிதழைக் கோருவது இயலாத காரியம். வழக்கமாகவே, இந்த மாதங்களில் ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாகக் காணப்படுவது வழக்கம். தேவைக்கு ஏற்ப ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். எங்குமே ரெயில்களுக்கு பற்றாக்குறை இருக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.