தேசிய செய்திகள்

”நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்று சேர்ந்து உழைப்போம்” - நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை விரைவுபடுத்த நாம் ஒன்றிணைந்து செயல்படுகிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி

நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.

இந்த உயர்மட்டக் கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை கவர்னர்கள் மற்றும் நிர்வாகிகள், பதவிவழி உறுப்பினர்களாகப் பணியாற்றும் மத்திய மந்திரிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர். நிதி ஆயோக்கின் துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆகியோரும் உடனிருந்தனர்.

வளர்ச்சிப் பயணம்

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வு தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-

நிதி ஆயோக்கின் ஆளும் குழுவின் 11வது கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறேன். கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் வழிகாட்டுதலுடன், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை விரைவுபடுத்த நாம் ஒன்றிணைந்து செயல்படுகிறோம். வளர்ச்சி அடைந்த இந்தியா என்கிற நமது பொதுவான தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகள் முக்கியப் பங்காற்றும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்தக் கூட்டத்தில், அடிப்படை மனித மூலதனத்தையும் எதிர்காலத்திற்குத் தயாரான திறன்களையும் வளர்த்தல், பரவலாக்கப்பட்ட வளர்ச்சி மூலம் ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவை ஊக்குவித்தல், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து விளைவுகளை மேம்படுத்துதல், மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சமத்துவத்தையும் கண்ணியத்தையும் உறுதி செய்தல் ஆகிய நான்கு முக்கியத் தூண்களை மையமாகக் கொண்ட "அனைவரையும் உள்ளடக்கிய மனித மேம்பாட்டுக் கட்டமைப்பு" குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்முனைவை ஊக்குவிப்பது, திறன் மேம்பாட்டு முயற்சிகளை வலுப்படுத்துவது மற்றும் நாடு முழுவதும் நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவற்றுக்கான வழிகள் குறித்தும் இந்தக் குழு விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, டிசம்பர் 26 முதல் 28, 2025 வரை நடைபெற்ற ஐந்தாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் இருந்து வெளிவந்த பரிந்துரைகளையும் உறுப்பினர்கள் ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.