தேசிய செய்திகள்

வெளிநாட்டு விருந்தினர்களுக்கு சுவையான மராட்டிய பலகாரங்கள்; அசத்திய பிரதமர் மோடி

செயற்கை நிறமிகள் எதுவுமின்றி இந்த பர்பிக்கள் தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டு உள்ளன.

மும்பை,

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 16-ந்தேதி ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடுக்கான கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது. பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த மாநாடு 20-ந்தேதி வரை நடைபெறும். இந்நிலையில், டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து உள்ளார்.

பிரதமர் மோடியின் அழைப்பையேற்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல் நாஹியான், சுலோவேக்கியா நாட்டு ஜனாதிபதி பீட்டர் பெல்லேகிரினி, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயகா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெற கூடிய முதல் உச்சி மாநாடு என்ற அளவில் அது பெருமையை பெற்றுள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி இன்று சந்தித்து உரையாடினார். அப்போது பிரதமர் மோடி சார்பில் மேக்ரான் மற்றும் அவருடைய குழுவினருக்கு சிறப்பான விருந்து அளிக்கப்பட்டது.

இதில், வெளிநாட்டு விருந்தினர்களுக்கும், பிரதமர் மோடி மற்றும் அவருடைய குழுவினருக்கும் சிறப்பான கவனம் மேற்கொண்டு மராட்டியத்தின் உள்ளூர் உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து உணவு தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதனை கவர்னர் மாளிகை வெளியிட்டு உள்ள தகவல் தெரிவிக்கின்றது. பிரதமர் மோடியின் குழுவில் மத்திய வெளிவிகார துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதில், மும்பையின் பாரம்பரிய உணவுகளான வடா பாவ், மிசால் பாவ் ஆகியவை பரிமாறப்பட்டன. பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் மற்றும் அவருடைய குழுவினர் வடா பாவை ரசித்து, ருசித்து சாப்பிட்டனர்.

சிறுதானியங்களை ஊக்குவிக்கும் பிரதமர் மோடியின் கொள்கையை கவனத்தில் கொண்டு, இயற்கையான முறையில் உருவான ஜோவார் ஹுர்தா காலை உணவில் பரிமாறப்பட்டது. இயற்கையாக விளைவிக்கப்பட்ட சப்போட்டா பழத்தில் செய்யப்பட்ட பாயசம், நறுமணம் மிக்க ஜாம், கோலாப்பூர் பர்பி ஆகியவையும் பிரதமர் மோடிக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டன. செயற்கை நிறமிகள் எதுவுமின்றி இந்த பர்பிக்கள் தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டு உள்ளன.